சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.6 கேட்டல் கருத்தறிதல்

பி.ஆர்.ராஜம்
(ஜனவரி 25, 1872 - மே 13, 1898)

பி.ஆர்.ராஜம் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளி ஆவார். எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தார். இவர் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். திண்ணைப் பள்ளி, உள்ளூர்ப் பள்ளி, மதுரை பாண்டித்தியப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சட்டம் பயிலும் ஆசையும் இவருக்கு இருந்தது. சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இறுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை. வரலாறும் சட்டமும் படித்திருந்தாலும் இலக்கியத்தில் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.

‘விவேக சிந்தாமணி’ மாத இதழில் ‘கமலாம்பாள் சரித்திரம்’ நாவலைத் தொடராக 3 ஆண்டுகளுக்கு எழுதினார். இதுதான் தமிழில் வெளியான முதல் தொடர்கதை ஆகும். தமிழில் வெளியான ஆரம்ப கால நாவல்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த நாவலை எழுதியபோது இவருக்கு வயது 21. சமூகம், பெண்கள் நலன், நகைச்சுவை, ஆன்மிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நாவலில், பல்வேறு பழமொழிகளையும் குட்டிக் கதைகளையும் ஆன்மிகக் கருத்துகளையும் எளிய நடையில் எழுதினார். வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாவல், 1896இல் நூல் வடிவம் பெற்றது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அங்கீகாரம் பெற்று, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தாயுமானவரின் நூல்கள் நிலையாமை குறித்து இவரை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டின. மேலும், ஆன்மிகம் சார்ந்த பாடல்கள் இவரை ஞான மார்க்கத்துக்கு வழிநடத்தின. சுவாமி விவேகானந்தரின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட ‘பிரபுத்தபாரதா’ ஆங்கில இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். குடற்சிக்கல் நோயின் காரணமாகத் தன்னுடைய 26-ஆவது வயதில் (1898) மறைந்தார்.

வினாக்கள்

பி. ஆர். ராஜம்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு என்னும் ஊரில் பிறந்தார்.

இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தது.

விவேக சிந்தாமணி என்ற மாத இதழில் கமலாம்பாள் சரித்திரம் நாவலைத் தொடராக 3 ஆண்டுகளுக்கு எழுதினார்.

பிரபுத்தபாரதா என்ற ஆங்கில இதழ்