சிகரம்
(முதல் பருவம்)
நிலவளமும் நீர்வளமும் மலைவளமும் கவின்மிகு காடுகளும் அமையப் பெற்றிருப்பதே ஒரு நாட்டிற்குப் பெருமையாகும். காடுகளும் மலைகளும் இயற்கை வடித்த இன்பக் கலைகள் என்பதைக் கம்பராமாயணம் குறிப்பிடுகிறது. இப்பாடப் பகுதியில் கம்பர் காட்டும் நாட்டு வளத்தைப் படித்தறிவோம்.
கோசல நாடு குறித்துப் பாடும்போது கம்பர் இப்படிச் சொல்கிறார்: அங்கு மக்களிடம் எந்தக் குற்றமும் இல்லாததால் அவர்களுக்கு இயற்கையால் ஏற்படும் மரணம் தவிர இளம் வயது மரணம் இல்லை. ஏனென்றால் அங்கு வாழ்வோர், மனத்தில் எந்தக் குற்ற எண்ணமும் இல்லாத தூய்மையான உள்ளம் உடையவர்கள்; அவர்கள் மனத்தில் சிறிதளவும் சினம் இல்லை; சினம் இல்லாத காரணத்தால் பெரிய குற்றங்கள் இல்லை; அதோடு நல்ல அறங்களையே செய்வதால் அவர்களிடம் தவறுகள் இல்லை.
கோசல நாட்டு வயலின் வரப்புகளில் முத்துகளும், தண்ணீர் பாயும் மடைகளில் சங்குகளும், மிகுந்த நீர்ப்பெருக்குடைய நிலங்களில் செம்பொன்னும் நிறைந்திருக்கின்றன, எருமைகள் படிகின்ற இடங்களில் செங்கழுநீர் மலர்களும், பரம்படித்த இடங்களில் பவளங்களும், நெற்பயிர் நிறைந்த வயல்களில் அன்னங்களும் இருந்தன. பயிரிடப்படாத நிலமெங்கும் செந்தேனும், அழகிய சோலைகளெங்கும் தேன் உண்டு மகிழும் வண்டுகளும் உள்ளன என்று கம்பர் புகழ்ந்துரைக்கிறார்.
நிலவளமே, நாட்டின் பல்வேறு வளங்களைத் தீர்மானிக்கிறது. நிலவளம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்றால் அங்கு நீர்வளமும் சிறந்தே காணப்படும். இந்நிலவளமும் நீர்வளமும் மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படைத்தேவையை நிறைவு செய்யும்.
| 1. | சினம் | - | கோபம் | ||
| 2. | மடை | - | நீரணை | ||
| 3. | கவின் | - | அழகு | ||
| 4. | வரப்பு | - | வயல் எல்லை | ||
| 5. | பரம்படித்தல் | - | நிலத்தைச் சமப்படுத்துதல் |