சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.6 கேட்டல் கருத்தறிதல்

துமி

கம்பராமாயணம் அரங்கேற்றப்படும்போது கம்பர் எழுதிய ‘துமி’ என்ற சொல்லைக் கேட்ட புலவர் ஒட்டக்கூத்தர் ’துமி’ என்ற சொல்லே தமிழில் கிடையாது என்று கூறினார்.

கம்பரிடம் மன்னர் இது பற்றிக் கேட்டார். “மன்னா! மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள வட்டார வழக்குச்சொல்தான் துமி” என்று கம்பர் பதில் சொன்னார். ஆனால் ஒட்டக்கூத்தரோ தமிழில் ’துமி’ என்கிற சொல் கிடையவே கிடையாது என்று வாதிட, கம்பரின் காவிய அரங்கேற்றம் நிறுத்தப்பட்டுவிட்டது.

மன்னர் மறுநாள் நகர்வலம் செல்லும்போது, கம்பரும் ஒட்டக்கூத்தரும் உடன் சென்றனர். அப்போது ஒரு வீட்டிலிருந்து ஒரு வினோத ஓசை வந்தது. “இது என்ன சத்தம்?” என்று மன்னர் கேட்டார். கம்பர் உடனே “மத்தினால் தயிர் கடையும் சத்தம் மன்னா” என்று சொன்னார். மன்னரை இந்த ஓசை மகிழ்ச்சியில் ஆழ்த்த, ”கொஞ்ச நேரம் நின்று கேட்போமே” என்று சொன்னார்.

அந்த வீட்டினுள்ளிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது: “குழந்தைகளா! கொஞ்சம் தள்ளி நில்லுங்கள், துமி தெறிக்கும்!”... இந்தச் சொற்களைக் கேட்டு, கம்பர் துள்ளிக் குதித்தார் ! மகிழ்ச்சி பொங்க, ”மன்னா! இதோ, துமி என்று சொல் இருக்கிறதே!” அதாவது குழந்தைகளின் உடல்மீது தயிர்த்துளி தெறித்து விடும் என்று அந்தப் பெண்மணி எச்சரிக்கிறாள் என்பதைக் கம்பர் விளக்கினார். மறுநாள் கம்பராமாயணம் மீண்டும் அரங்கேற்றப்பட்டது.

வினாக்கள்

ஒட்டக்கூத்தர்

துமி

ஒட்டக்கூத்தரும் கம்பரும் மன்னருடன் நகர்வலம் சென்றனர்.

‘துமி’ என்னும் சொல்லின் பொருள் ‘துளி’ ஆகும்.

’துமி’ என்னும் சொல்லால் கம்பராமாயணம் நூலின் அரங்கேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தகவல் துளி

சங்க காலத்தில், சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று தமிழ்நாடு மூன்று பிரிவுகளாக இருந்தது. வடவேங்கடமும் தென்குமரியும் தமிழகத்தின் எல்லைகள் எனத் தொல்காப்பியத்தின் வழி அறிகிறோம். தமிழ்நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு, 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை ’மெட்ராஸ் மாகாணம்’ என அழைக்கப்பட்டு வந்த பகுதியில், தமிழர்கள் வாழ்ந்த பகுதி மட்டும் ’மெட்ராஸ் ஸ்டேட்’ ஆனது. இதனை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யக்கோரி விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 76 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து, உயிர்நீத்தார். பின்னர், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1967–இல் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.