சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.2 படிப்போம்

பூமியின் முற்றம் முழுவதும் சுற்றம்

சில கவிதைகளை வாசிக்கும்போது சமூகத்தின் மீது ஒருவிதப் பற்று ஏற்படுகிறது. நம்மால் இயன்றவரை சமூக வளர்ச்சிக்குத் துணைநிற்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. கீழ்க்காணும் கவிதை மனிதநேயத்துடன் கூடிய சமூகச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

நாடு விட்டு நாடு
நநதிநடந்து போனதென்று
நாடு கடத்திய துண்டா
நதிகளை எவரேனும்?

வேற்று நாட்டுப் பக்கம்
வேலி தாண்டிய தென்று
காற்றினை யாரேனும்
கைது செய்ததுண்டா?

மேலூரில் பொழிந்துவிட்டு
கீழூரில் பெய்யவரும்
சூல்மேகத்தைஎல்லைச்
சுவர்கள் தடுத்ததுண்டா?

எல்லைப் புறமரங்கள்
அண்டைநாட்டு நீர்க்குடித்தால்
வில்லங்கம் செய்ததென்று
வேர்களையா வெட்டுகிறோம்?

என்திக்கு இதுவென்று
எண்ணுவதேன் என்தோழா?
என்இலக்கு பொதுவென்று
எழுச்சிகொள், எழுந்துநில்!

- தாராபாரதி

பாடல் விளக்கம்

நாடுவிட்டு நாடு செல்லும் நதிகளை எவரும் நாடு கடத்துவதில்லை. வேலிதாண்டி வரும் காற்றினை எவரும் கைது செய்வதில்லை. மழை பொழிந்துவிட்டுத் தம்மூர் வரும் சூல் மேகத்தை எவரும் சுவர் வைத்துத் தடுப்பதில்லை. அண்டை நாட்டின் நீரைக் குடிப்பதால் மரங்களின் வேர்களை எவரும் வெட்டுவதில்லை. ஆனால் மனிதனே! என் எல்லை இதுவென்று எண்ணி மனிதர்களை மட்டும் ஏன் தடுக்கிறாய்?. அனைவரும் பொது என்ற இலக்கொடு எழுச்சிகொள்! எழுந்துநில்!

நூலைப் பற்றி

’கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்’ என்னும் கவிதைத்தொகுப்பில் ’பூமியின் முற்றம் முழுவதும் சுற்றம்’ என்னும் தலைப்பில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் தாராபாரதி. இவரது இயற்பெயர் இராதாகிருஷ்ணன். ’கவிஞாயிறு’ என்னும் சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறார். ’புதிய விடியல்கள்’, ’இது எங்கள் கிழக்கு’, ’விரல்நுனி வெளிச்சங்கள்’, ’பூமியைத் திறக்கும் பொன்சாவி’, ’இன்னொரு சிகரம்’ போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

பொருள் அறிவோம்

1. பற்று - பிடிப்பு
2. எண்ணி - நினைத்து
3. எழுச்சி - புறப்பாடு