சிகரம்
(முதல் பருவம்)
வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் வாழ்க்கைமுறையை அறிவதற்கு அகழாய்வுகள் பெரிதும் உதவுகின்றன. தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த பொருள்கள் தமிழக வரலாற்றை அறிவதில் இன்றியமையாப் பங்காற்றுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் புதைமேடு அமைந்துள்ளது. இப்புதைமேட்டை முதலில் உலகறியச் செய்தவர் பெர்லினைச் சேர்ந்த எஃப். ஜகோர். இவர் ஸ்டூவர்ட்டுடன் இணைந்து இந்த அகழாய்வில் ஈடுபட்டார். பின்னர் அலெக்சாண்டர் ரியா, அங்கே பெரிய அளவிலான அகழாய்வுகளை மேற்கொண்டார். இந்த அகழாய்வுகளில் பல மட்பாண்டங்கள், பானை ஓடுகள், இரும்பினாலான பொருள்கள், எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
பானைகளில் மடக்கி வைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட பல மனிதர்களின் முழு எலும்புக்கூடுகள் பல ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டன. இது இறந்தவர்களைப் புதைக்கும் இடமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.
இங்கு 178 முதுமக்கள் தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதுமக்கள் தாழி உள்ள தொல்லியல் தலங்களில் மிகவும் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பது ஆதிச்சநல்லூர்தான். அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கை சார்ந்த பல அடையாளங்களை முதுமக்கள் தாழிகளுக்குள் விட்டுச்சென்றுள்ளனர்.
ஆதிச்சநல்லூர் புதைமேட்டில் இறந்தவர்களைப் புதைப்பது இரண்டு விதமாக நடந்திருக்கிறது. ஒன்று, இறந்தவர்களின் உடலை முழுமையாகப் புதைப்பது. இரண்டாவது, இறந்தவர்களை வேறு இடத்தில் புதைத்து, சில காலத்துக்குப் பிறகு அந்த உடலில் எஞ்சிய எலும்புகளைச் சேகரித்து மீண்டும் புதைப்பது.
மேலும், தாழிகளுக்குள் கண்டெடுக்கப்பட்ட அரிசி, நெல், பாசிப்பயறு போன்ற தானியங்களைக் கொண்டு பண்டைய கால வேளாண் சமூகத்தை அறிய முடிகிறது. தாழிகளுக்குள் குவார்ட்ஸ் மணிகள், அடுப்பு போன்ற பொருள்களும் கிடைத்துள்ளன. இவை ஆதிச்சநல்லூரில் சங்ககால மக்கள் வாழ்ந்ததையும் கடல்சார் வணிகம் நடந்ததையும் உறுதிப்படுத்துகின்றன.
இங்கே கிடைத்த ஒரு பானையின் உட்புறத்தில் நடனமாடும் பெண்ணின் உருவம் வரையப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில் கரும்பு போன்ற தாவரம், கொக்கு, முதலை போன்றவை வரையப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கலை வடிவங்கள் வெகு அரிதாகவே கிடைத்துள்ள நிலையில், மட்பாண்டங்களைச் சுடுவதற்கு முன்பாகவே மிக நுண்ணிய தூரிகையால் அவற்றில் வரையப்பட்டுள்ள சில வடிவங்கள் நமக்குப் பல அரிய தரவுகளை அளிக்கின்றன. |
|
ஆதிச்சநல்லூரில் பெரும் எண்ணிக்கையில் இரும்புப்பொருள்களும் குறைந்த எண்ணிக்கையில் தாமிரப்பொருள்களும் கிடைத்திருக்கின்றன. இரும்புப் பொருள்களைப் பொறுத்தவரை உழுவதற்கான கருவிகள், ஆயுதங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வுப் பணியில் முதல்முறையாக சங்ககாலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களின் இரண்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், கடல் ஆமைகளின் உருவமும், மரம், யானை, மீன் ஆகியவற்றின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் புதைமேட்டில் கிடைக்கும் சான்றுகள் வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் வாழ்க்கைமுறை, கலை, பண்பாடு, பழக்கவழக்கம் போன்றவற்றை அறிய உதவும் கருவூலமாக உள்ளன. இங்கே கிடைத்த சான்றுகள் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. |
|