சிகரம்
(முதல் பருவம்)
வாளை கொண்டு வந்தான்
என்ற தொடரில் வல்லினம் மிகாமல் வாளைமீனைக் கொண்டுவந்தான் என்று பொருள் தருகிறது.
வாளைக் கொண்டுவந்தான்
என்ற தொடரில் வல்லினம் மிகுந்து வெட்டும் வாளைக் கொண்டுவந்தான் என்று பொருள் தருகிறது.
மேற்கண்ட தொடர்களிலிருந்து வல்லினம் மிகுந்தால் ஒரு பொருளும் வல்லினம் மிகாமல் இருந்தால் வேறொரு பொருளும் வருவதை அறிந்துகொள்ள முடிகிறது. எனவே, மொழியைப் பிழையின்றி எழுத வல்லினம் மிகும்/மிகா இடங்களை அறிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது.
சான்று
| 1. | குதிரை | + | கனைத்தது | = | குதிரை கனைத்தது |
| 2. | பள்ளி | + | சென்றாள் | = | பள்ளி சென்றாள் |
| 3. | எவ்வளவு | + | தந்தான் | = | எவ்வளவு தந்தான் |
| 4. | நல்ல | + | பையன் | = | நல்லபையன் |
| 5. | ஆறு | + | பேர் | = | ஆறு பேர் |
| 6. | வளர்க | + | தமிழ் | = | வளர்க தமிழ் |
| 7. | புறா | + | பறந்தது | = | புறா பறந்தது |
மேற்கண்ட சான்றுகளில் குதிரை, பள்ளி, எவ்வளவு, நல்ல போன்ற சொற்கள் நிலைமொழி. கனைத்தது, சென்றாள், தந்தான், பையன் போன்ற சொற்கள் வருமொழி ஆகும். நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது வல்லினம் மிகவில்லை.
| வ.எண். | வல்லினம் மிகா இடங்கள் | சான்றுகள் |
| 1. | அது, இது, அவை, இவை என்னும் சுட்டுப்பெயர்களுக்குப் பின் மிகாது | அது பெரிது இது சிறந்தது அவை காகங்கள் இவை தாளங்கள் |
| 2. | எது, யாது, எவை என்ற வினாப்பெயர்களின் பின் மிகாது. | எது சிறந்தது? யாது செய்வேன்? எவை தீயவை? |
| 3. | இரண்டாம் வேற்றுமைத்தொகை, நான்காம் வேற்றுமைத்தொகையில் மிகாது. | தண்ணீர் தந்தான் சென்னை சென்றான் |
| 4. | எட்டு, பத்து என்னும் எண்ணுப்பெயர்கள் தவிர பிற எண்ணுப்பெயர்களின் பின் மிகாது | ஆறு பேர் மூன்று தமிழ் ஏழு கடல் |
| 5. | வியங்கோள் வினைமுற்றுத்தொடரில் மிகாது. | வளர்க தமிழ் வாழ்க பல்லாண்டு |
| 6. | வினைத்தொகையில் மிகாது | திருவளர் செல்வன் ஊறுகாய் |
| 7. | உம்மைத்தொகையில் மிகாது | இரவுபகல் வெற்றிலைபாக்கு |
| 8. | எழுவாய்த் தொடரில் மிகாது | மலர் பூத்தது புறா பறந்தது |
| 9. | சிறிய, பெரிய என்னும் சொற்களின் பின் மிகாது. | பெரிய காடு சிறிய பாதை |
| 10. | அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றில் மிகாது. | பந்து பந்து கலகல |