சிகரம்
(முதல் பருவம்)
பாறை ஓவியங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களால் செதுக்கப்பட்டவை. தாங்கள் வாழ்ந்த இடங்களில் உள்ள பாறைகளிலும் குகைகளிலும் ஓவியங்களை வரைந்து வைத்துள்ளனர். உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களுள் அளவில் மிகவும் பெரியது கரிக்கையூரில் கிடைத்த பாறை ஓவியமே.
கரிக்கையூர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இவ்வூரிலிருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவில் ’பொறிவரை’ எனும் பாறை ஒதுக்கு உள்ளது. இப்பாறை ஒதுக்கு சுமார் 500 அடி நீளமும் சுமார் 150 அடி உயரமும் கொண்டுள்ளது. இங்கே காணப்படும் ஓவியங்கள் தொல் பழங்கால வேட்டைச் சமூகத்தைச் சார்ந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை.
இங்கு வாழ்ந்த மனிதர்கள் வேட்டைச் சமூகம், கால்நடைச் சமூகம், வேளாண்மைச் சமூகம் என ஐயாயிரம் வருடச் சமூக வாழ்க்கையை ஓவியமாகத் தீட்டியுள்ளனர். இங்கே சில சென்டி மீட்டர் அளவில் உள்ள சிறுவடிவ ஓவியங்கள் முதல் பெரிய அளவிலான ஓவியங்கள் வரை ஒரே இடத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள ஓவியங்கள் வெவ்வேறு ஓவியர்களால் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டவை ஆகும். இவற்றுள் தொன்மையான ஓவியங்கள் புதிய கற்காலத்தில் வரையப்பட்டிருக்கக் கூடும். இவ்வோவியங்கள் பெரும்பாலும் அடர் சிவப்பு வண்ணத்தில் காணப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த இக்கலை வடிவங்கள் அக்கால சமூக நிகழ்வுகள், பொருளாதாரம், கருத்தியல், அழகியல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தகவல்களை நமக்குத் தெரிவிக்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் வரலாற்றைச் சுமந்து நிற்கும் கரிக்கையூர் பாறை ஓவியத்தை ஓர் அதிசயம் என்றே கூறலாம்.
பாறை ஓவியங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களால் செதுக்கப்பட்டவை.
புதிய கற்காலம்
கரிக்கையூர் ஓவியங்கள்
கரிக்கையூர் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சில சென்டி மீட்டர் அளவில் உள்ள சிறுவடிவ ஓவியங்கள் முதல் பெரிய அளவிலான பாறை ஓவியங்கள் வரை கரிக்கையூரில் காணக்கிடைக்கின்றன.