சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.2 படிப்போம்

முத்தொள்ளாயிரம்

இயற்கைதான் பூமியின் ஆடை. உயிர்களுக்குக் கிடைத்த சிறந்த கொடை. சங்க காலம்முதல் தற்காலம்வரை இயற்கையைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். புலவர் ஒருவர் சேரநாட்டின் இயற்கை வளத்தை முத்தொள்ளாயிரம் பாடல்வழி வெளிப்படுத்தும் பாங்கு அழகானது

சேரநாட்டின் இயற்கை வளம்

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ
வெள்ளம் தீப்பட்டது எனவெரீஇ, - புள்ளினம் தம்
கைச்சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கௌவை உடைத்து அரோ
நச்சிலை வேல் கோக்கோதை நாடு.

பாடலின் பொருள்

சேரநாடு சேறு நிறைந்த வயல்களை உடையது. அவ்வயல்களில் அரக்கு நிறம் கொண்ட செவ்வல்லி மலர்கள் பூத்துள்ளன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்துவிட்டது என்று அஞ்சின. தம் குஞ்சுகளைத் தீயிலிருந்து காப்பபாற்ற நினைத்துத் தம் சிறகுகளால் படபடவென அடித்து அவற்றை அணைத்துக் கொண்டன. இந்த ஆரவாரம் தவிர, மக்கள் துயர் மிகுதியால் செய்யும் ஆரவாரத்தை, சேர நாட்டில் காண்பது அரிது. ஏனென்றால் சேர மன்னன் கையிலேந்திய வேலில் நஞ்சு பூசப்பட்டிருக்கும். இதனால் பகைவர் அவன்பால் பேரச்சம் கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது இப்பாடல்.

நூலைப் பற்றி

மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியரின் புகழைப் பாடுவது முத்தொள்ளாயிரம் ஆகும். இது வெண்பாக்களால் ஆனது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. ‘புறத்திரட்டு’ என்னும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட 108 செய்யுள்கள் இன்று முத்தொள்ளாயிரம் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. அவர் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.

பொருள் அறிவோம்

1. அள்ளல் - சேறு
2. பழனம் - வயல்
3. வாய்அவிழ - விரிய
4. வெரீஇ - அஞ்சி
5. புள்ளினம் - பறவை இனம்
6. பார்ப்பு - குஞ்சு
7. கௌவை - ஒலி
8. கோதை நாடு - சேரநாடு