சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.3 படிப்போம்

கடல்சார் வாழ்க்கை

கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் நிலமாகும். நீரின் அளவிற்கேற்ப வளரும் தன்மை கொண்டது நெய்தல் மலர். பண்டைத் தமிழர், இம்மலரின் பெயராலேயே கடல் சார்ந்த பகுதிக்கு நெய்தல் எனப் பெயரிட்டனர். இந்நிலத்தில் வாழும் மக்கள் ’பரதவர்’ என்று அழைக்கப்பட்டனர். நெய்தல் நில மக்களின் வாழ்வாதாரமாகக் கடல் இருந்தது.

வாழிடம்

நெய்தல் நிலக் குடிசைகளின் மேற்பகுதி புல், முள்ளிச்செடி, தாழை ஆகியவற்றால் அமைக்கப்பட்டிருக்கும். குடிசைகளின் முன்பகுதிகளில் ஓலைகளுடைய பனைமரங்கள் காணப்படும். இப்பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வீட்டிற்கு வேலி அமைத்தனர்.

உணவு மற்றும் உடை

நெய்தல் நில மக்களுக்கு அதிகளவு உணவாகப் பயன்படுவது மீன். உப்புக்கு மாற்றாகப் பெற்ற நெல்லைக் கொண்டு அரிசியாக்கிச் சமைத்தனர். சமைத்த சோற்றின் மீது அயிரை மீன் புளிக்குழம்பும் கருவாட்டுப் பொரியலும் சேர்த்து உண்டனர். நெய்தல் நில மகளிர் அழகிய பூக்களுடன் கூடிய, பசுமையான தழை உடையினை உடுத்திக்கொண்டு கானற்பூக்களை உடைய கடற்கரைச் சோலைக்கு அடிக்கடி விளையாடச் செல்வர்.

தொழில்

நெய்தல் நிலத்தினரின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தல் ஆகும். பிடித்த மீன்களை மணற்பரப்பில் காய வைத்து விற்றனர். தாங்கள் பிடித்த மீன்களை மற்றவரிடம் கொடுத்து அவரிடமுள்ள வேறு பொருளைத் தம் தேவைக்கு ஏற்பப் பெற்றுக்கொண்டனர். கடல் நீரைத் தேக்கி உப்பு தயாரித்தனர். கடலிலிருந்து கிடைத்த முத்து, பவளம், சங்கு முதலிய பொருள்களைக் கொண்டு அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய அணிகலன்களைச் செய்தனர். பழந்தமிழர் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினர்.

கலை மற்றும் பண்பாடு

பரதவப் பெண்கள் மணமிக்க நெய்தல் மலர்களைக் கொண்டு தங்கள் இல்லங்களை அழகுபடுத்தினர். இளமகளிர் கீழைக்காற்று குவித்த மணலிலே, ஆயத்தாருடன் கூடிக் குரவையாடுவர். மாலைநேரத்தில் தம் இல்லங்களில் மீன் கொழுப்பினைச் சேர்த்து உருக்கிய நெய்யைக் கொண்டு விளக்கேற்றினர். கடற்கரையில் எல்லையில்லாத பொருள்கள் குவிந்துகிடக்கும். நெய்தல்நில மக்கள் அவற்றை வந்த விருந்தினர்க்ககெல்லாம் வாரி வழங்குவர். இத்தகைய சிறப்பினை உடையது நெய்தல் நிலச் சிற்றூர்.

பொழுதுபோக்கு

நெய்தல்நிலச் சிறுமியர் மணலில் புன்னைக்காயை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுமி வெள்ளிய மணலில் விளையாட்டாகப் புன்னைக் காயை அழுத்திப் புதைத்தாள். பின்னர் அது முளைக்க ஆரம்பித்தது. அச்செடிக்குப் பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்தாள். செடியும் மரமாக வளர்ந்தது. தலைவியும் வளர்ந்தாள். அச்சிறுமியின் தாய் வளர்ந்த புன்னை மரத்தைச் சிறுமிக்குத் தங்கை என்று அறிமுகப்படுத்தினாள். இதன் மூலம் நெய்தல்நிலத்தினர் தாவரங்களுடனும் நல்லுறவு கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

நெய்தல்நில மக்களுக்குக் கடல் முக்கிய ஆதாரமாக இருந்துள்ளது. கடல்சார்ந்த வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து இயற்கையோடு இயைந்து வாழ்ந்துள்ளனர். தாவரங்களைத் தங்கள் குடும்ப உறுப்பினராகப் போற்றியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

பொருள் அறிவோம்

1. ஓட்டுதல் - விரட்டுதல்
2. கீழைக்காற்று - கிழக்கிலிருந்து வீசும் காற்று
3. குரவை - பெண்கள் வட்டமாக நின்று விளையாடும் விளையாட்டு