சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.6 கேட்டல் கருத்தறிதல்

திருவள்ளுவர் சிலை

உலகப்பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவருக்குத் தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் பகுதியில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருங்கல்லால் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான சிலை இதுவே ஆகும். இச்சிலையின் உயரம் 133 அடிகள் ஆகும். திருக்குறளின் 133 அதிகாரங்களையும் குறிக்கும் வகையில் 133 அடிகளில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் இச்சிலையின் பீடம் 38 அடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் மேல் நிற்கும் சிலையானது 95 அடிகள் உயரம் கொண்டது. இது பொருட்பாலின் 70 அதிகாரங்களையும் காமத்துப்பாலின் 25 அதிகாரங்களையும் குறிக்கின்றது. பீடத்தின் சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன

இந்தச் சிலை அமைக்கும் பணி 1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டுவரை தொடர்ந்து 10 ஆண்டுகள் நடைபெற்றது. 01-01-2000இல், தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் இச்சிலையானது திறந்து வைக்கப்பட்டது. உலகையே சூறையாடிய சுனாமி தாக்குதலிலும் சிறுதும் சேதமடையாமல் கம்பீரமாகவே நிற்கின்றது.

இன்று கன்னியாகுமரி செல்லும் மக்கள் இச்சிலையை மிகுந்த வியப்போடு பார்த்துச் செல்கின்றனர். கடல் அரிப்பால் பாதிப்பு ஏற்படாதவண்ணம் இச்சிலை, தமிழ்நாட்டரசால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இச்சிலையை நிறுவியது தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். இச்சிலையை வடிவமைத்த தலைமைச் சிற்பி திரு கணபதி ஸ்தபதி ஆவார்.

வினாக்கள்

திருவள்ளுவர்

133 அடி

01.01.2000இல், தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

133

தகவல் துளி

சமண சமயத்தைச் சேர்ந்த திகம்பரத் துறவிகள் மலைக்குகையில் தங்கினர். அவர்கள் தங்களின் தங்குமிடங்களிலேயே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்களுக்குக் கற்பித்தனர். ‘பள்ளி’ என்ற சொல்லுக்குப் ‘படுக்கை’ என்று பொருள். சமணர்களின் படுக்கைகள் மீது மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என அழைக்கப்படலாயிற்று. பள்ளி என்னும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடையாகும். பெண்களுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் பெண் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.