சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.2 படிப்போம்

தொழிலின் சிறப்பு

ஒரு நாட்டின் தொழில்நிலை சிறந்தால்தான் அந்நாடு சிறந்த நாடாகக் கருதப்படும். வேளாண்மை, வணிகம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், உற்பத்தி, தொழிற்சாலை போன்றவை ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நாடும் நாமும் வாழ்ந்திடவே

நல்ல தொழிலைச் செய்திடுவோம்

காடும் மேடும் திருத்திடுவோம்

கழனிகள் பலபல செய்திடுவோம்

அணைகள் ஏரிகள் அமைத்திடுவோம்

ஆறும் குளமும் வெட்டிடுவோம்

இணையில் லாத உழுதொழிலால்

எல்லா உணவும் படைத்திடுவோம்

இரும்புத் தொழில் பல செய்திடுவோம்

இயந்திரம் எல்லாம் இயற்றிடுவோம்

கரும்பின் ஆலை பஞ்சாலை

கலைநூல் ஆலைகள் அமைத்திடுவோம்

போக்கும் வரவும் நடந்திடவே

புதுப்புதுக் கார்கள் செய்திடுவோம்

கோக்கும் ரயிலைக் கப்பல்களைக்

குணத்தில் சிறக்கச் செய்திடுவோம்

வானக் கப்பலும் செய்திடுவோம்

வகையாய்ச் சைக்கிளும் இயக்கிடுவோம்

கானத் தியங்கும் வண்டிகளும்

காரில் சிறக்கச் செய்திடுவோம்

- அடிகளாசிரியர்

பாடலின் பொருள்

நாடும் நாமும் வாழ்ந்திட நல்ல தொழிலைச் செய்திட வேண்டும். காட்டையும் மேட்டையும் திருத்தி வயல்கள் பலபல செய்திட வேண்டும். வயல்களுக்கு நீர் கொண்டுவர அணைகள், ஏரிகள், ஆறுகள், குளங்கள் அமைத்திட வேண்டும். இவை எல்லாம் செய்தால்தான் இணையில்லாத உழுதொழில் சிறக்கும். அதனால் எல்லா உணவுகளையும் படைத்திட முடியும்.

இரும்பு தொடர்பான தொழில்கள் பல செய்திட வேண்டும். இயந்திரம் பல செய்திட வேண்டும். கரும்பாலை, பஞ்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் அமைத்திட வேண்டும். போக்குவரத்திற்காக மிதிவண்டி, மகிழுந்து, தொடர்வண்டி, கப்பல், வானூர்தி போன்றவை செய்திடவேண்டும் என அடிகளாசிரியர் குறிப்பிடுகிறார்.

நூலைப் பற்றி

அடிகளாசிரியர் எழுதிய சிறுவர் இலக்கியம் என்னும் நூலில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அடிகளாசிரியரின் இயற்பெயர் குருசாமி. இவர் உ.வே.சாமிநாதரிடம் தமிழ் பயின்றார். இவர் எழுதிய சிறுவர் இலக்கியம் என்ற நூலை அப்துல் கலாம் அவர்கள் பாராட்டியுள்ளார். தொல்காப்பியச் செம்மல், செந்நாப்புலவர், தமிழ்ப்பேரவைச் செம்மல் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவரைப் பாராட்டியுள்ளது.

பொருள் அறிவோம்

1. கழனி - வயல்
2. அணை - நீர்த்தேக்கம்
3. குளம் - நீர்நிலை
4. வானக் கப்பல் - வானூர்தி