சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.3 படிப்போம்

வாரன் எட்வர்ட் பஃபெட்

பங்குச்சந்தை என்பது வணிக நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் இருக்கும் பொதுச்சந்தையைக் குறிக்கும். இது பணத்தை முதலீடு செய்ய பல வழிகளை வழங்குகிறது. பங்குச்சந்தை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இந்தப் பங்குச்சந்தை வணிகத்தில் தலைசிறந்து விளங்கியவர் வாரன் பஃபெட். அவரின் சாதனைகளை இப்பாடப் பகுதியில் காண்போம்.

பங்கு வர்த்தகத் தந்தை வாரன் பஃபெட்

2006ஆம் ஆண்டு அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அந்தச் செய்தியைக்கேட்ட அத்தனை பேரும் வியப்பிற்குள்ளானார்கள்.

இத்தனை பரபரப்புக்கும் காரணமான அந்தச் செய்தி இதுதான்…

‘பங்குச்சந்தையின் தந்தை என்றழைக்கப்படும் வாரன் பஃபெட், தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த 37 பில்லியன் டாலர் பணத்தை உலக மக்களின் நல்வாழ்வுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்‘. இவ்வளவு பணத்தை நன்கொடையாகக் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்த, அந்த வாரன் பஃபெட் யார்?

முதலீடு என்று வந்துவிட்டாலே அதற்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுபவர் வாரன் பஃபெட். உலகின் மிகப் பெரும் பங்கு முதலீட்டாளர், புத்தக எழுத்தாளர், சமூக ஆர்வலர் எனப் பல முகங்கள் இவருக்கு இருக்கின்றன.

இவர் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஒமாஹா என்ற இடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் வாரன் எட்வர்ட் பஃபெட். சிறு வயதில் ஒமாஹா நூலகத்தில் இருந்த ‘ஒன் தௌசண்ட் வேஸ் டு மேக் 1000 டாலர்’ (One thousand ways to make $1000 ) என்ற புத்தகத்தால் ஈர்க்கப்பட்டார்.


வாரன் எட்வர்ட் பஃபெட்

வீடுவீடாகச் சென்று நாளிதழ் போடும் வேலையைச் செய்தார். சுவிங்கம், கோககோலா, கோல்ப் பந்து போன்றவற்றை விற்பனை செய்தார். நண்பனுடன் சேர்ந்து பின்பால் (Pinball) இயந்திரம் ஒன்றை வாங்கினார். அதை முடிதிருத்தும் நிலையத்தில் வைத்து அதன் மூலம் சம்பாதிக்கத் தொடங்கினார். இதில் நல்ல இலாபம் கிடைக்கவே நிறைய இடங்களில் இதுபோல நிறைய இயந்திரங்களை வைத்துச் சம்பாதித்தார். கடைசியில் இந்தத் தொழிலை 1200 டாலர்களுக்கு விற்றுவிட்டார். தான் சேர்த்து வைத்திருந்த 1200 டாலர் பணத்தைக் கொண்டு நிலம் வாங்கினார்.

இதுபோலப் பணம் சம்பாதிப்பதில் அவரது அறிவுத்திறன் அதிகமாகவே இருந்தது. அவர் தனது 14ஆவது வயதிலேயே வருமான வரி செலுத்தியிருக்கிறார். சிறு வயது முதலே வாரன் பஃபெட்டுக்குப் பங்குச்சந்தை மீது அதிக ஆர்வம் இருந்தது. தனது 11ஆவது வயதிலேயே பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். அப்போது ’சிட்டீஸ் சர்வீஸ்’ என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். அந்தப் பங்கின் விலை அவர் வாங்கிய பின்னர் ஏறவே இல்லை. முதலில் வீழ்ச்சியையே சந்தித்தார். ஆனாலும் அதன் பங்குகள் ஏறும் வரை காத்திருந்து அதன் பிறகு விற்பனை செய்தார்.

பங்குச்சந்தை குறித்த மிகுந்த அறிவைக் கொண்டிருந்ததால் முதலீட்டில் சிறந்து விளங்கினார். பங்கு வர்த்தகத்தில் தோல்வியைச் சந்திக்கும் என்று நினைத்த நிறுவனங்களையெல்லாம் வாங்கி விற்று அதில் வெற்றிகள் கண்டார். பெர்க்ஷைர் ஹேதவே என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கி முழு நிறுவனத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

உலகின் பெரிய பணக்காரர் வரிசையில் இவரின் பெயரும் இடம்பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார். முதலீட்டில் மட்டுமல்ல, நன்கொடையிலும் சிறந்த மனிதராகத் திகழ்ந்து வருகிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் பெற்றார் பஃபெட்.

”அன்றாடம் 500 பக்கங்கள் படிப்பதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களது அறிவை வளர்க்க உதவும். இதனை அனைவராலும் செய்துமுடிக்க முடியும். ஆனால் அனைவரும் இதனைச் செய்ய மாட்டார்கள். தொடர்ந்து படிக்கப் பழகிக்கொள்ளும்போது உங்களோடு உங்களது அறிவும் வளரும்” என்கிறார் உலகப் பங்குத்தந்தை வாரன் பஃபெட்.