சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.2 படிப்போம்

சிலப்பதிகாரம்

‘கலை’ என்பது கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிப்படுத்த உதவுவது. இது மனிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. கலை, மக்களை மகிழ்விக்கவும், கருத்துகளை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது. தமிழர்கள் கலைகளை நிகழ்த்துவதோடு மட்டுமல்லாமல் அதற்கான அரங்கு அமைக்கும் திறனையும் பெற்றிருந்தனர் என்பதைச் சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கின்றது.

அரங்க அமைப்பு

”நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக,
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நால்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்து; ஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துஉடன் வகுத்து . . .”

- இளங்கோவடிகள்

பாடலின் பொருள்

சிற்ப நூலாசிரியர் கூறும் இயல்பிலிருந்து மாறாதபடி, நிலத்தைத் தேர்ந்தெடுத்து, சான்றோர்கள் கூறிய நெறிப்படி அரங்கம் அமைத்தனர். ஒருகோல் அளவு மூங்கிலையே அரங்கம் அமைக்கப் பயன்படுத்தினர். ஒருகோல் அளவு என்பது தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்குஅளவினைக் கொண்டதாகும்.

அரங்கமானது தரையிலிருந்து ஒருகோல் அளவு உயரத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டது. அதன்மேல் பலகைகள் இட்டுத் தளம் அமைத்தனர். அரங்கமானது ஏழு கோல் அகலமும் எட்டு கோல் நீளமும் உடையதாக இருந்தது. அரங்கின் மேல் அமைப்பு உத்தரம் எனப்படும். உத்தரம், பலகைகளால் மூடப்பட்டிருந்தது. உத்தரப் பலகைக்கும் தளப் பலகைக்கும் இடையே நான்கு கோல் அளவு இடைவெளி இருந்தது. அரங்குக்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித்தனியே இரண்டு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரங்கில் அமைக்கப்பட்ட தூண்களின் நிழல்கள் அரங்கில் விழாதபடி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், நடன அரங்கில் மூன்று வகையான திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி ஆகியனவாகும். அரங்கின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லும் ஒருமுக எழினி. அரங்கின் இருபுறத்திலிருந்தும் நடுவில் பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுக எழினி. மேலிருந்து கீழே இறங்கும் வகையில் அமைக்கப்படும் கரந்துவரல் எழினி. இவ்வாறான மூன்று திரைச்சீலைகளும் நடன அரங்கில் அமைக்கப்பட்டிருந்தன.

நூலைப் பற்றி

சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. இது முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் 3 காண்டங்களையும் 30 காதைகளையும் உடையது. சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள்.

பொருள் அறிவோம்

1. அரங்கு - நடன மேடை
2. எழுகோல் - ஏழு கோல்
3. எண்கோல் - எட்டுக் கோல்
4. நால்கோல் - நான்கு கோல்
5. உத்தரப் பலகை - மேல் இடும் பலகை
6. பூதர் - ஐம்பூதங்கள்
7. எழினி - திரைச்சீலை