சிகரம்
(முதல் பருவம்)
மனிதனின் அழகியல் வெளிப்பாடே கலை. கலை என்பது பார்ப்போர், கேட்போர் மனத்தில் அழகியல் உணர்வை உண்டாக்கும். மேலும் அந்தந்தப் பகுதியின் பண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்தும். கூத்து என்ற சொல்லே கலைகளைக் குறிக்கப் பயன்பட்ட மிகப் பழமையான சொல்லாகும். கிராமங்களில் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றாகக் கூத்து நடைபெற்று வந்தது. தெருக்களின் ஓரங்களில் இடம் அமைத்து நிகழ்த்துவதால் இதைத் தெருக்கூத்து என்றழைத்தனர். தெருக்கூத்துக் கலையினைப் பற்றி இப்பாடப் பகுதியில் படிப்போம்.
தெருக்கூத்திற்கான திறந்தவெளி மேடை வீதிகளிலும், நாற்சந்திகளிலும், கோயில்களுக்கு அருகிலும் அமைக்கப்படும். இம்மேடையின் மேற்பகுதியைத் தென்னை ஓலைகளால் அமைத்திருப்பர். மேடையை, நடிகர்கள் வருவதற்கு முன்பு வெள்ளைத்துணியால் மறைத்திருப்பர். நடிகர் வந்து அதன் பின்புறம் நின்றதும் திரை அகற்றப்படும்.
தொடக்க காலத்தில் ஒளியமைப்புக்காகத் தெருக்கூத்து மேடையில் ‘தீவட்டிகள்’ பயன்படுத்தப்பட்டன. பிறகு மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு, காலமாற்றத்துக்கேற்ப, தற்போது மின்விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
தெருக்கூத்தில் நடிகர்கள் ஆடியும் பாடியும் நடிப்பது வழக்கம். பொதுவாக ஒலிபெருக்கி போன்றவை தெருக்கூத்து மேடைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஓங்கிய குரலில் பாடியும், குதித்தும் நடிகர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அப்படியே கேட்டு ரசிப்பதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். தற்போது ஒலிபெருக்கிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
தெருக்கூத்தில் இசை முக்கியமான கூறாக விளங்குகிறது. மிருதங்கம், டோலக், ஜால்ரா, புல்லாங்குழல், ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பெறுகின்றன. இவை ‘பக்க வாத்தியங்கள்’ எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.
இசைக்குழுவினர் மேடையின் பின்பக்கம் திரையை ஒட்டி, பார்வையாளர்களைப் பார்த்து அமர்ந்திருப்பர். இசையின் ஒலிப்பு ஓங்கிக் கேட்கும் வண்ணம் இசைக்கப்படும்.
தெருக்கூத்துக்கான ஒப்பனை தனித்துவம் வாய்ந்தது. கதாப்பாத்திரங்களை வேறுபடுத்தவும், பொலிவுபெறச் செய்யவும் ஒப்பனை உதவுகிறது.
விலை குறைந்த மற்றும் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருள்களான அரிதாரம், கரிப்பொடி, காக்காப்பொன் ஆகியன முகத்தில் பூசப்படும் ஒப்பனைப் பொருள்களாகும்.
ஆண் வேடதாரிகள் பெரும்பாலும் நீளக்கால் சட்டையுடன் சரிகை தைக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துகிறார்கள். பெண்ணைப் போல் வேடமிட்டவர்கள் பெரும்பாலும் புடவைகளைப் பயன்படுத்துகின்றனர்.
மக்களுக்கு நன்கு அறிமுகமான தொன்மை இலக்கியங்கள், நாட்டுப்புறக்கதைகள், புராண இதிகாசக் கதைகள் தெருக்கூத்துக்கான கதைகளாக உள்ளன. எனினும் கால மாற்றத்திற்கேற்ப சமகாலத்தில் நடைபெறும் நிகழ்வுகள் தெருக்கூத்தில் இடம்பெறும். மதுரை வீரன், பவளக்கொடி, நல்லதங்காள், அர்ச்சுனன் தபுசு, ஆரவல்லி சூரவல்லி, பாரதக்கூத்து, காத்தவராயன், சித்திராங்கி போன்றவை குறிப்பிடத்தக்க தெருக்கூத்துக் கதைகளாகும்.
தொடக்கத்தில் பாடல்கள் பாடப்பெறும். அடுத்ததாகக் கட்டியங்காரனின் வருகை அமையும். கூத்தில் வரக்கூடிய பாத்திரங்களைக் கட்டியங்காரன் அறிமுகம் செய்வான். கூத்தின் நிகழ்ச்சிகளையும், சூழலையும், கதைப் போக்கையும் விளக்குவதாக அவனது பேச்சும்நடிப்பும் அமைந்திருக்கும்.
மேடையில் நடிகர்கள் குதித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தோடு அறிமுகம் ஆவார்கள். வாத்திய இசைக்கு ஏற்ப தாள அசைவுடன் ஆடியும், பாடியும் நடிப்பார்கள். தனது செய்கைகளால் சிரிக்கவைக்கும் ‘கோமாளி’ கூத்தில் சிறப்பிடம் பெறுகிறார்.
தெருக்கூத்து, தமிழின் நல்லதொரு நாடக வடிவமாகும். இத்தெருக்கூத்தின் செல்வாக்கு இன்றைய மேடை நாடக வடிவத்திற்குள்ளும் வந்திருக்கிறது.
| 1. | நாற்சந்தி | - | நான்கு சாலைகள் சந்திக்கும் இடம் | ||
| 2. | கட்டியங்காரன் | - | நகைச்சுவைக் கதைமாந்தர் | ||
| 3. | தீவட்டி | - | தீப்பந்தம் | ||
| 4. | டோலக், ஜால்ரா | - | இசைக்கருவிகள் |