சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.4 தெரிந்துகொள்வோம்

வழக்கு

வழக்கு என்பதற்கு மரபு அல்லது பழக்கம் என்று பொருள். ’வழக்குச் சொற்கள்’ என்பன மக்கள் நடைமுறை வழக்கத்தில் பயன்படுத்தும் சொற்கள். எந்தப் பொருளை எந்தச் சொல்லால் நம் முன்னோர் வழங்கி வந்தனரோ அவ்வாறே தொடர்ந்து வழங்கி வருவதையே வழக்கு என்பர். இது இரண்டு வகைப்படும்: அவை,

இயல்பு வழக்கு

ஒரு பொருளைச் சுட்டுவதற்கு எந்தச் சொல் இயல்பாக அமைகிறதோ அச்சொல் இயல்பு வழக்குச் சொல் எனப்படும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். அவை,

இலக்கணமுடையது

இலக்கண விதிகளுக்கு உட்பட்டு அமையும் சொற்கள் ’இலக்கணமுடையது’ எனப்படுகின்றது. ’மழை பெய்தது’, மாடு மேய்ந்தது’ போன்ற சொற்கள் இலக்கண விதிகளுக்கு உட்பட்டு அமைவதால் இவை இலக்கணமுடையது எனப்படுகின்றது.

இலக்கணப்போலி

இலக்கணத்திற்கு அப்பாற்பட்டு, தொன்றுதொட்டு வழங்கிவருவது இலக்கணப்போலி. இலக்கணமுடைய சொற்கள் போல ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் ’இலக்கணப்போலி’ ஆகும்.

இல்வாய் – வாயில், நகர்ப்புறம் – புறநகர், தசை – சதை ஆகியன இலக்கணப்போலி ஆகும்.

மரூஉ

மருவி வழங்கி வரும் சொற்கள் மரூஉச் சொற்கள் ஆகும். காலமாற்றத்தினால் எழுத்துகளோ ஒலியோ சிதைவுற்று வழங்கி வருவதாகும்.

தஞ்சாவூர் – தஞ்சை.

திருநெல்வேலி – நெல்லை.

திருச்சிராப்பள்ளி – திருச்சி போன்றவை மரூஉச் சொற்களாகும்.

தகுதி வழக்கு

பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொல்லை நீக்கித் தகுதியான வேறு சொல்லால் சொல்வது தகுதி வழக்கு. அதாவது தகுதியான சொற்களைப் பேசுவது.

தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை

இடக்கரடக்கல்

பிறரிடம் கூறுவதற்கு இடர்ப்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கித் தகுந்த சொற்களால், அப்பொருளைக் குறிப்பிடுவதை இடக்கரடக்கல் என்பர்.

சான்று- ‘மலம் கழுவி வந்தேன்‘ என்பதைக் ‘கால் கழுவி வந்தேன்‘ எனக் கூறுவர்.

மேலும் சில சான்றுகள்,

1. வாய் கழுவி வந்தான் - வாய் பூசி வந்தான்

2. சிறுநீர் கழித்து வந்தேன் - ஒன்றுக்குப் போய் வந்தேன்

மங்கலம்

மங்கலம் அல்லாத சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் அப்பொருளை வழங்குவது மங்கலம் என்பர்.

சான்று - ‘செத்தார்‘ என்பதை ‘துஞ்சினார்‘ என்றும் ‘இறைவனடி சேர்ந்தார்‘ என்றும் கூறுவர்.

மேலும் சில சான்றுகள்,

1. விளக்கை அணை - விளக்கைக் குளிரவை

2. சுடுகாடு - நன்காடு

குழூஉக்குறி

ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில், ஒரு பொருளுக்குக் குறிப்பாக வழங்கும் பெயரைக் குழூஉக்குறி என்பர்.

சான்று - பொற்கொல்லர் ‘பொன் (தங்கம்)‘ என்பதைப் ‘பறி‘ என்று கூறுவர்.

மேலும் சில சான்றுகள்,

1. யானைப்பாகர் ஆடையைக் ‘காரை‘ என்பர்.

2. வசம்பு என்னும் மருந்துப் பொருளைப் ‘பெயர் சொல்லாதது‘ என்பர்.