சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
14.2 படிப்போம்

காஃபித் தோட்டப் பாட்டு

நாட்டுப்புறப் பாடல்கள் என்பவை எளிய மக்களின் வாழ்வோடு கலந்தவை. பிறப்புமுதல் இறப்புவரை ஒவ்வொரு நிகழ்விலும் இடம்பெறுபவை. நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களாக உள்ளன. இப்பாடல்கள் வழியே மக்கள் தங்களின் இன்ப துன்பங்களை வெளிப்படுத்தினர். அவ்கையில் ‘காஃபித் தோட்டப் பாட்டு‘ காஃபித்தோட்டங்களில் பணியாற்றிய மக்களின் துன்பங்களை எடுத்துரைக்கிறது.

1. பெண்ணே நவமணியே பிரியமுள்ள மாமயிலே
கண்ணே என் கண்மணியே தங்கரெத்தினமே - கண்டி
காஃபித்தோட்டம் கதையைக்கேளு பொன்னுரெத்தினமே!

2. சிங்கப்பூர் பினாங்கு கண்டி செழிப்பானதேசமென்று
எங்கும் இந்திய ஜனத்தைத் தங்கரெத்தினமே - கங்காணி ஏமாற்றிக்
கொண்டுபோறான் பொன்னுரெத்தினமே!

3. பெண்டு பிள்ளைகளுடன் பிரியத்தோடு போனோர்களை
உண்ணவுண வில்லாமல் தங்கரெத்தினமே - கங்காணி
ஓயாமல் வேலைவாங்கிப் பொன்னுரெத்தினமே!

4. பட்டப்பகல் தனிலே பாழடைந்த தோட்டத்திலே
அட்டை கடியினாலே தங்கரெத்தினமே - ஜனங்கள்
அலறித் துடிக்கிறாராம் பொன்னுரெத்தினமே!

5. எல்லோரும் சொல்லுவது என்னமோ என்றிருந்தேன்
கல்லான மனமானாலும் தங்கரெத்தினமே - இந்தக்
கதையைக் கேட்டால் கரைந்திடுமே பொன்னுரெத்தினமே!

பாடல் விளக்கம்

நவமணி போன்ற பெண்ணே! அன்பானவளே! மயில் போன்றவளே! கண்ணே! கண்மணி போன்றவளே! இலங்கையில் உள்ள கண்டி நகரத்தில் உள்ள காஃபித் தோட்டத்தின் கதையை நீ கேட்பாயாக என் தங்கரெத்தினமே! பொன்னுரெத்தினமே!

சிங்கப்பூர், மலேசியாவின் பினாங்கு, இலங்கையின் கண்டி போன்ற செழிப்பான நாடுகளுக்குக் கங்காணிகள் எனப்படும் கண்காணிப்பாளர்கள், இந்திய மக்களை ஏமாற்றிக் காஃபித்தோட்டங்களுக்கு அடிமையாகப் பணியாற்றக் கூட்டிச் சென்றனர்.

கங்காணி கூறிய ஆசைவார்த்தைகளில் ஏமாந்து அன்பான மனைவியையும் குழந்தைகளையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களை உண்பதற்கு உணவுகூடக் கொடுக்காமல் கங்காணி துன்புறுத்தினான்.

பகல் நேரத்தில் பாழடைந்த காஃபித் தோட்டங்களில் மக்கள் பணிபுரிந்தனர். அப்போது, அங்குள்ள இரத்தம் உறிஞ்சும் அட்டைகளால் கடிபட்டுத் துன்புற்றனர்.

இவ்வாறெல்லாம் பிறர் கூறும்போது எளிதாக எண்ணினேன். ஆனால் இப்போது அக்கொடுமைகளை நானே எதிர்கொள்கிறேன். இவ்வாறான காஃபித் தோட்டக் கதையைக் கேட்டால் கல்லான மனமும் கரைந்துவிடும். இவ்வாறாகக் காஃபித் தோட்டத்தில் பணியாற்றிய மக்களின் துன்பங்கள் கூறப்படுகின்றன.

நூலைப் பற்றி

‘காஃபித் தோட்டப் பாட்டு‘, குஜிலி இலக்கிய வகையைச் சேர்ந்தது. குஜிலி இலக்கியம் என்பது நாட்டுப்புறப் பாடல் வடிவத்தின் ஒரு வகையாகும். மேற்கண்ட பாடல் ஒரு பெண்ணை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது. இசைக்கோவைக்காகத் ‘தங்க ரெத்தினமே, பொன்னு ரெத்தினமே’ எனப் பாடப்பட்டுள்ளது.

பொருள் அறிவோம்

1. கண்டி - இலங்கையிலுள்ள ஒரு நகரம்
2. பினாங்கு - மலேசிய மாநிலங்களுள் ஒன்று
3. தேசம் - நாடு
4. ஜனம் - மக்கள்
5. பெண்டு - பெண்கள்
6. கங்காணி - கண்காணிப்பாளர்