சிகரம்
(முதல் பருவம்)
மரபைப் பின்பற்றி நிகழ்த்தப்படும் கலைகளுள் ஒன்று பொம்மலாட்டம். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 21ஆம் நாள் உலக பொம்மலாட்ட நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பொம்மலாட்டக் கலைஞர் முல்லைவாணன் அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடுகிறார்கள்.
| கதிர் | : | வணக்கம் ஐயா, உலக பொம்மலாட்ட நாள் வாழ்த்துகள். இந்த இனிய நாளில் உங்களைக் காண்பதில் பெருமகிழ்வு கொள்கிறோம். | |
| முல்லைவாணன் | : | மாணவர்களுக்கு வணக்கம். இளைய தலைமுறையினர் நாட்டுப்புறக்கலைகளின் மீது கொண்டுள்ள ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது. | |
| வான்மதி | : | ஐயா பொம்மலாட்டம் தமிழர்களின் மரபுவழிக் கலைகளுள் ஒன்றா? | |
| முல்லைவாணன் | : | ஆமாம். பொம்மலாட்டம், தமிழர்களின் மரபுவழிக் கலைகளுள் ஒன்றுதானம்மா. | |
| தேன்தமிழ் | : | பொம்மலாட்டம் எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது? | |
| முல்லைவாணன் | : | மரத்தாலான பொம்மைகளை நூலால் கட்டித் திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் ஒரு சுவையான நிகழ்வு. இதனை மரப்பாவைக் கூத்து என்றும் அழைப்பர். | |
| அகிலன் | : | இதற்கான பொம்மைகள் தயாரிக்கும் முறை குறித்துக் கூறுங்கள் ஐயா. | |
| முல்லைவாணன் | : | பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளைக் கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என அழைக்கப்படும் மரத்திலிருந்து செய்கிறார்கள். இந்தப் பொம்மைகள் 45 செ.மீ. முதல் 90 செ.மீ. வரை உயரமுடையதாக இருக்கும். | |
| மலர் | : | கேட்கவே சுவையாக உள்ளது. பொம்மலாட்ட அரங்கம் பற்றியும் கூறுங்கள் ஐயா? | |
| முல்லைவாணன் | : | பொம்மலாட்ட அரங்கம் 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் இருக்கும். முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் இந்தக் கலை நிகழ்த்தப்படும். திரைக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கும் பொம்மலாட்டக் கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும். | |
| புகழ் | : | பொம்மலாட்டத்தில் கலைஞர்களின் பங்கு குறித்துக் கூறுங்கள் ஐயா? | |
| முல்லைவாணன் | : | பொம்மலாட்டத்தில் மொத்தமாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். மற்ற 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார். ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும். தற்போது சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அரங்கின் வலப்புறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். | |
| நிலா | : | பொம்மைகளை இயக்குவது குறித்தும் விளக்குங்கள் ஐயா? | |
| முல்லைவாணன் | : | பொம்மையை இயக்குபவர் திரைக்குப் பின்னே இருப்பார். அவர் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிய மாட்டார். மேலும் கீழும் அசைத்தல், பக்கவாட்டில் அசைத்தல் என இருவகைகளில் பொம்மைகள் இயக்கப்படும். உயிரற்ற பொம்மைகள் உயிர் பெற்றுத் திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களை ஒன்றச் செய்வதே இந்தக் கலையில் இயல்பான தன்மையாக உள்ளது. | |
| இனியன் | : | என்னென்ன கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பொம்மலாட்டத்தை இயக்குவார்கள்? | |
| முல்லைவாணன் | : | பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படுகின்றன. குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு. ஆனால் தற்காலத்தில் சமூக நிகழ்வுகள், விழிப்புணர்வுச் செய்திகள், பகுத்தறிவுச் சிந்தனைகள், சிறுவர் நாடகங்கள் போன்றவற்றையும் கதைக்கருவாக எடுத்துக்கொண்டு பொம்மலாட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன. | |
| ஆதினி | : | பொம்மலாட்டம் குறித்துப் பல்வேறு தகவல்களைச் சுவையாகத் தெரிவித்த தங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா. |
பொம்மலாட்டக் கலை நவீன காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. சமகால நிகழ்வுகளையும் கதைக்களமாகக் கொண்டு எளிய முறையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
| 1. | மரப்பாவை | - | மரத்தாலான பொம்மை | ||
| 2. | தோற்பாவை | - | தோலால் ஆன பொம்மை | ||
| 3. | முகவீணை | - | இசைக் கருவி |