சிகரம்
(முதல் பருவம்)
ஒரு சொல் தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பதை ஆகுபெயர் என்பர். எனவே ஒரு சொல்லின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றிற்கு ஆகி வருவதே ஆகுபெயராகும்.
இவற்றில் உலகம், பள்ளி என்னும் இடப்பெயர்கள் இடத்தை உணர்த்தாமல் முறையே உலகிலுள்ள மக்களையும் பள்ளியிலுள்ள மாணவர்களையும் உணர்த்துகின்றன. எனவே இவை ஆகுபெயர் எனப்பட்டன.
| வ.எண். | ஆகுபெயர் | இலக்கணம் | எடுத்துக்காட்டு | விளக்கம் |
| 1. | பொருளாகு பெயர் | முதல் பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய இன்னொரு (உறுப்பு) பொருளுக்கு ஆகி வருதல். | மல்லிகை சூடினாள். | மல்லிகைக் கொடியைக் குறிக்காமல் பூவைக் குறித்தது. |
| 2. | இடவாகு பெயர் | இடத்தின் பெயர் இடத்தோடு தொடர்புடைய இன்னொன்றிற்காக ஆகி வருவது | உலகம் வியந்தது | உலகத்தைக் குறிக்காமல் மக்களைக் குறித்தது. |
| 3. | காலவாகு பெயர் | காலப்பெயர் அதனுடன் தொடர்புடைய ஒன்றிற்குப் பெயராக ஆகிவருவது காலவாகு பெயராகும். | திசம்பர் சூடினாள் | திசம்பர் மாதத்தைக் குறிக்காமல் பூவைக் குறித்தது. |
| 4. | சினையாகு பெயர் | ஒரு சினைப்பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும். | தலைக்குப் பத்து ரூபாய் கொடு. | தலை என்ற உறுப்பைக் குறிக்காமல் நபரைக் குறித்தது. |
| 5. | பண்பாகு பெயர் | ஒரு பண்பின் பெயர், அப்பண்பையுடைய பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர். | வீட்டிற்கு வெள்ளை அடித்தான். | பண்பைக் குறிக்காமல் சுண்ணாம்பைக் குறித்தது. |
| 6. | தொழிலாகு பெயர் | தொழிற்பெயர்கள் செயல் அல்லது தொழிலைக் குறிக்காமல் அதனுடன் தொடர்புடைய ஒன்றிற்குப் பெயராக ஆகி வருவது தொழிலாகு பெயராகும். | பொங்கல் உண்டான் | பொங்குதல் என்ற தொழிலைக் குறிக்காமல் உணவைக் குறித்தது. |
| 7. | எண்ணல் அளவை ஆகு பெயர் | ஓர் எண்ணல் அளவையின் பெயர் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவையாகு பெயர் எனப்படும். | ஒன்று பெற்றால் ஒளி மயம். | எண்ணைக் குறிக்காமல் குழந்தையைக் குறித்தது. |
| 8. | எடுத்தல் அளவை ஆகுபெயர் | ஓர் எடுத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவையாகு பெயர் எனப்படும். | மூன்று கிலோ வாங்கி வா. | அளவைக் குறிக்காமல் பொருளைக் குறித்தது. |
| 9. | முகத்தல் அளவை ஆகுபெயர் | திரவப் பொருளை முகந்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். ஒரு முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது முகத்தல் அளவையாகு பெயர் எனப்படும். | ஐந்து லிட்டர் வாங்கி வா. | அளவைக் குறிக்காமல் திரவத்தைக் குறித்தது. |
| 10. | நீட்டல் அளவை ஆகுபெயர் | நீட்டி அளப்பது நீட்டல் அளவை ஆகும். ஒரு நீட்டல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவையாகு பெயர் எனப்படும். | இரண்டு மீட்டர் கொடுங்கள். | அளவைக் குறிக்காமல் துணியைக் குறித்தது. |
| 11. | சொல்லாகு பெயர் | ஒரு சொல் சொன்னவற்றிற்கும் பிறவற்றிற்கும் ஆகுபெயராக வருவதால் அது சொல்லாகு பெயர் ஆகும். | இந்தப் பாட்டு என் சிந்தனையைத் தூண்டியது. | பாட்டைக் குறிக்காமல் பாடலுக்கான பொருளைக் குறித்தது. |
| 12. | தானியாகு பெயர் | ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி), அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானத்திற்கு) பெயராகி வருவது தானியாகு பெயர் ஆகும். | பாலை இறக்கு. | பாலைக் குறிக்காமல் பால் உள்ள பாத்திரத்தைக் குறித்தது. |
| 13. | கருவியாகு பெயர் | ஒரு கருவியின் பெயர் அக்கருவியால் ஆகும் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும். | புல்லாங்குழல் கேட்டு மகிழ்ந்தாள் | புல்லாங் குழலைக் குறிக்காமல் இசையைக் குறித்தது. |
| 14. | காரியவாகு பெயர் | ஒரு காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்கு (கருவிக்கு) ஆகி வந்தால் காரியவாகு பெயர் எனப்படும். | நான் குறள் கற்றேன். | குறள் என்பது பா வகையைக் குறிக்காமல் திருக்குறள் நூலைக் குறித்தது. |
| 15. | கருத்தா ஆகுபெயர் | ஒருவர் செய்த பொருளின் பெயர், செய்தவரின் பெயருக்கே ஆகி வருவது. | வைரமுத்துவைப் படி | கவிஞரைக் குறிக்காமல் அவர் இயற்றிய நூலைக் குறித்தது. |
| 16. | உவமையாகு பெயர் | ஓர் உவமைப் பெயர், அதனால் உவமிக்கப்படுகின்ற பொருளுக்கு ஆகி வருவது, உவமையாகுபெயர். | மயில் ஆடினாள் | உவமையைக் குறிக்காமல் பொருளைக் குறித்தது. |