சிகரம்
(முதல் பருவம்)
தஞ்சாவூர் ஓவியம் என்பது தனித்தன்மை வாய்ந்த ஓர் ஓவியக்கலை ஆகும். இது கடவுள்களின் உருவங்களை வரைவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஓர் ஓவிய முறை. ‘மூச்சிமார்கள்’ என்பவர்கள் ஓவியம் வரைவதைக் குலத்தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள்தான் தஞ்சாவூர் ஓவியக்கலையைப் பரவலாக்கினர். மராத்திய மன்னர்கள் தஞ்சையை ஆண்ட காலத்திலும் இவ்வோவியர்களை ஆதரித்தனர். இரண்டாம் சரபோஜி மன்னர் இந்தக் கலையைப் பெருமளவு ஆதரித்தார்.
பலாமரம் அல்லது தேக்குமரப் பலகையில் பொருத்தப்பட்ட கித்தான் துணியின் மீது (Canvas) இவ்வகை ஓவியங்கள் வரையப்படுகின்றன. இம்முறையில் வரையப்படும் உருவங்களுக்கென்று சில தனித்தன்மைகள் உண்டு. இவ்வுருவங்களின் உடல் சற்றே பருத்ததாக இருக்கும். முகம் வட்டவடிவில் இருக்கும். கண்கள் பாதாம் பருப்பு வடிவத்தில் அமையும். கை கால்கள் வட்டுருவாக இருக்கும். மூக்கு, உதடுகள் கோடுகளால் அமைக்கப்படும். உருவத்தின் முகம் சாந்தமாகவும், சற்றே புன்னகை பூத்தபடியும் இருக்கும். வரையப்படும் உருவம் ஒரு பீடம் அல்லது ஊஞ்சலின் மீது அமர்ந்திருக்கும். அது ஆபரணங்கள், மாலைகள் அணிந்திருக்கும். இவற்றைப் பார்த்தாலே இது தஞ்சாவூர் ஓவியம் எனச் சொல்லிவிடலாம்.
தஞ்சாவூர் ஓவியக்கலை வடிவில் வரையப்படும் உருவங்களின் உடல்மீது பிரகாசமான வண்ணங்கள் தூரிகையைப் பயன்படுத்தித் தீட்டப்படும். இந்த வண்ணங்கள் எல்லாம் இயற்கையாகக் கிடைக்கும் வண்ணங்களே. இரசாயனக் கலவை, செயற்கை வண்ணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை. பச்சை இலைகளை அரைத்துத் தயாரிக்கப்பட்ட விழுது, மஞ்சள் கிழங்கின் விழுது, செந்தூரம், கோபி, சுண்ணாம்பு விழுது, மலர்களை அரைத்துத் தயாரித்த விழுது ஆகியவற்றைக் கொண்டு வண்ணங்கள் தீட்டப்படும்.
சில படங்களில் உள்ள உருவங்களின் மீது தங்கப் பூச்சு பூசப்பட்டிருக்கும். உருவம் அணிந்திருக்கும் நகைகள் மீது வைரக்கற்கள், பச்சைக்கற்கள், சிவப்புக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். முத்துக்களும் பதிக்கப்பட்டிருக்கும். படத்தில், உருவத்திற்கு வெளியே தோரணங்கள், அலங்கார வளைவுகள், மண்டபங்கள் வரையப்பட்டிருக்கும். இவையும் தங்க முலாம் பூசப்பட்டவை. இவ்வகை ஓவியங்கள் விலை உயர்ந்தவை. இவ்வகை ஓவியத்திற்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு 2007ஆம் ஆண்டு கிடைத்துள்ளது.
தஞ்சாவூர் ஓவியக்கலை கடவுள்களின் உருவங்களை வரைவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
மூச்சிமார்கள்
இரண்டாம் சரபோஜி மன்னர்
இயற்கையானவை
2007 ஆம் ஆண்டு