சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.2 படிப்போம்

நீலகேசி

மனித வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர்ந்து புதுமைகள் படைத்துவருகிறது அறிவியல். அறிவியலும் தொழில்நுட்பமும் இன்று மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளன. இத்தகைய நவீன அறிவியல் சிந்தனைகளின் வெளிப்பாடுகளை, தமிழர்தம் பண்டைய இலக்கியங்களிலேயே காணலாம். இவை அறிவியல் சிந்தனைகளில் தமிழர்கள் கொண்டிருந்த திறனை வெளிக்காட்டுகின்றன. ஒலி, ஒளி பற்றிய அறிவியல் சிந்தனைகளை ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசி எவ்வாறு விளக்குகிறது என்று பார்க்கலாம்.

உற்றிலவாய் ஒலி கொள்ளும் செவிஎன ஓதுகின்றாய்
கற்றிலை மெய்ம்மை நீ கட்புலம் தன்னோடு ஓர் காலத்தினால்
பெற்றிலம் நாம் அதன் பின் கொளல் தானும் பெரும் தவத்தாய்
மற்று இது தான்தன் பொறி உறுகாறும் வரலின் அன்றே.

(பாடல் : 516)

வாய்த்துரை ஈதுஎன வாமன்இது சொல்லும் வந்துஉறுமேல்
சேய்த்து எனக் கோடலும் சேராது ஒலி செவிக்கண்ணது எனின்
ஈத்தனதாம்அல வாயினும் நீசொல்லும் உற்று அறிவின்
தீத்தனைப் போலவும் தேறு என்று அவனைத் தெருட்டினளே.

(பாடல் : 517)

பாடலின் பொருள்

பெருந்தவத்தை உடையவரே! காதுகள் ஒலியைக் கவரும் என்கிறாய். காதுகளால் ஒலியைக் கவர இயலாது. ஒரே நேரத்தில் தோன்றுகின்ற ஒளி ஒலியை நாம் ஒருசேரப் பெறுவதில்லை. ஒளியை முன்னரே காண்கிறோம். அதன் பின்னரே ஒலியைக் கேட்கிறோம். எனவே, ஒலியே செவியை வந்தடைகிறது. செவி ஒலியை அடைவதில்லை.

ஒலியானது வெளியிலிருந்து வந்து காதுகளை அடைகிறது. ஒலி உள்ளே தோன்றுவது கிடையாது. ஒலியைக் காதுகள் ஈர்ப்பது இல்லை; உணர்கின்றன. நம் புலன்கள் உணர்வுடையவை. தீயின் வெப்பத்தை உடல் உணர்கிறது. அதைப் போன்று புலனறிவின் மூலம் காதும் ஒலியை உணர்கிறது.

நூலைப் பற்றி

நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. நீலகேசித் திரட்டு என்றும் இதை அழைப்பர். இது விருத்தப்பாக்களால் ஆனது. குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது இது. நீலகேசி என்னும் சமண சமயப் பெண், பல சமயத் தலைவர்களிடம் வாதம் செய்து, சமண நெறியை நிலைநாட்டுவதாக இந்நூல் கூறுகிறது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகிறது. இந்நூலை எழுதியவர் யார் என அறியப்படவில்லை. இதன் உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர்.

பொருள் அறிவோம்

1. செவி - காது
2. கற்றிலை - அறியவில்லை
3. பெருந்தவத்தாய் - பெரிய தவமுடையவரே
4. வாய்த்துரை - பொருத்தமான உரை
5. தேறு - தெளிவு