சிகரம்
(இரண்டாம் பருவம்)
தமிழ் இலக்கியங்கள் மக்களுக்கு அறத்தை மட்டுமல்ல, அறிவியலையும் கற்றுக்கொடுத்தன. பண்டைத் தமிழர்கள் அறிவியல் துறையில் பெரும்புலமை பெற்றிருந்தனர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்துகின்றன. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், திருமந்திரம், திருவாசகம் முதலிய நூல்களின் மூலம் பழந்தமிழர்கள் அறிந்திருந்த அறிவியல் நுணுக்கங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். சில எடுத்துக்காட்டுகளை இங்கே காண்போம்.
தமிழரின் அறிவியல் சிந்தனைகளுள் குறிப்பிடத்தக்கது வானியல் பற்றிய அறிவாகும். ஞாயிறு, திங்கள் என ஆராய முற்பட்டபோதே வானியல் ஆய்வு தோன்றிவிட்டது எனலாம். உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளுள் மிகப்பழமையானது வானியல் கல்வி. உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐந்தும்கலந்தது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
நிலம்நீர் தீ வளிவிசும்போடு ஐந்தும்(தொல்காப்பியம், பொருள். 635)
பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்புவரை, உலகம் தட்டையானது என்றே கருதிவந்தனர். பிறகு, பதினாறாம் நூற்றாண்டில், உலகம் உருண்டையானது என்பதைக் கண்டுபிடித்தார் கலீலியோ. ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்,
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்என்னும் குறட்பாவில் உலகம் சுழல்கிறது எனக் கூறுகிறார். உருண்டையான பொருள்தான் சுழலும் என்பது அறிவியல் உண்மை. எனவே, உலகம் உருண்டையாக இருக்கும் என்பதை எந்த அறிவியல் கருவியும் இல்லாத அந்தக் காலத்திலேயே வள்ளுவர் உணர்ந்து தம் குறளில் கையாண்டுள்ளமை வியப்புக்குரியது.
செஞ்ஞாயிறு செல்லும் வழி, அதன் இயக்கம், அதைச் சூழ்ந்து பிற கோள்கள் இயங்கும் மண்டிலம், காற்றும் இயங்கும் திசை, காற்றின்றி வெற்றிடமாக உள்ள ஆகாயம் ஆகியவற்றை நேரில் சென்று கண்டவர்கள்போல் அவை இத்தனை அளவுடையன என்று சொல்லும் அறிஞரும் உள்ளனர் என்கிறது 30-ஆவது புறநானூற்றுப் பாடல்.
செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்(புறநானூறு, 30)
இதனால், ஞாயிற்றுக்கு மற்றவற்றை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என்றும், வானில் காற்று இல்லாத வெற்றிடம் உண்டு என்றும் அன்று அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது.
கோள்களின் நிறம், வடிவம் முதலியவற்றைப் பற்றியும் தமிழர் அறிந்திருந்தனர். செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என அழைத்தனர். இன்றைய அறிவியல் வல்லுநர்கள் செவ்வாய்க் கோளில், சிவப்பு நிறமாய் மண் இருப்பதைச் செயற்கைக்கோள் அனுப்பும் ஒளிப்படங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். வியம் / வியன் என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும். விண்வெளியில் வலம்வரும் பெரிய கோளையே வியாழன் என்றனர்.
நிலவு வளர்கையில் பதினைந்து நிலைகளை அடைவதைப் போலவே தேய்கையிலும் பதினைந்து நிலைகளை அடைகிறது. எட்டாம் நாள் பிறைநிலவு ‘எண்ணாட்டிங்கள்’ (புறநானூறு, 118) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமதி தோன்றும் பெருநாளில், ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒரு சுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது என்பதை,
உவவுத்தலை வந்தபெருநாள் அமையத்து(புறநானூறு, 65)
என்பதால் அறியலாம்.
அறிவியல் சிந்தனைகளை ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுக்கான விடை தேடும் முயற்சியாகத் தமிழர்கள் வெளிப்படுத்தினர். பண்டைத் தமிழருடைய வானியல் பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் வானியல் அறிஞர் சிலேட்டர் போன்றவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.
| 1. | வளி | - | காற்று | ||
| 2. | விசும்பு | - | வானம் | ||
| 3. | மயக்கம் | - | கலப்பு | ||
| 4. | ஞாயிறு | - | சூரியன் | ||
| 5. | திங்கள் | - | சந்திரன் |