சிகரம்
(இரண்டாம் பருவம்)
ஒரு தொடர்மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ தொகாமல் (மறையாமல்) அப்படியே பொருளை உணர்த்துவது தொகாநிலைத்தொடர் எனப்படும்.
எ.கா: மூங்கில் வளைந்தது
இத்தொடரில் ‘மூங்கில்’ என்னும் எழுவாயும் ‘வளைந்தது’ என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று பொருளை உணர்த்துகிறது. இவ்விரு சொற்களுக்கு இடையே சொல்லோ உருபோ மறைந்து நிற்கவில்லை. இவ்வாறான தொடர்களையே ‘தொகாநிலைத்தொடர்கள்’ என்பர். இது ஒன்பது வகைப்படும்.
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த் தொடர் ஆகும்.
எ.கா:
| கபிலன் கவிஞன் | - | பெயர் |
| இலக்கியா படித்தாள் | - | வினை |
| நீ வருவாயா? | - | வினா |
மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியன பயனிலைகளாக வந்து எழுவாய்த்தொடர்கள்அமைந்துள்ளன.
விளியுடன் வினைதொடர்வது விளித்தொடர் ஆகும்.
எ.கா:
வேலா வா! – ‘வேலா’ என்னும் விளிப்பெயர் ‘வா’ என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
எ.கா:
எழுதினார் இளங்கோ
’எழுதினார்’ என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.
முற்றுப்பெறாத வினையைப் பெயர்ச்சொல் தொடர்வது பெயரெச்சத்தொடர் ஆகும்.
எ.கா:
எழுதிய பாடம் – ‘எழுதிய’ என்னும் எச்சவினை ‘பாடம்’ என்னும் பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.
முற்றுப்பெறாத வினையை, வினைச்சொல் தொடர்வது வினையெச்சத்தொடர் ஆகும்.
எ.கா:
ஓடிச் சென்றனர். – ‘ஓடி’ என்னும் எச்சவினை ‘சென்றனர்’ என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்கள்ஆகும்.
எ.கா:
நீரை ஊற்றினார் – (ஐ) இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர். இத்தொடரில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
இடைச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது இடைச்சொல்தொடர் ஆகும்.
எ.கா:
மற்றொன்று - மற்று + ஒன்று
’மற்று’ என்னும் இடைச்சொல்லை அடுத்து ’ஒன்று’ என்னும் எண்ணுப்பெயர் நின்று பொருள் தருகிறது.
உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது உரிச்சொல்தொடர் ஆகும்.
எ.கா:
நனி நன்று
’நனி’ என்பது உரிச்சொல், அதைத் தொடர்ந்து ’நன்று’ என்ற சொல் நின்று ’மிக நன்று’ என்ற பொருளைத்தருகிறது.
ஒரு சொல் இரண்டு மூன்றுமுறை அடுக்கித் தொடர்வது அடுக்குத்தொடர் ஆகும்.
எ.கா:
வாழ்க! வாழ்க!
ஒரே சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.