சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.6 கேட்டல் கருத்தறிதல்

பூஜ்ஜியம் (சுழி)

உலகுக்கு இந்தியா அளித்த கொடைகளுள் முக்கியமானது பூஜ்ஜியம். பூஜ்ஜியம் இல்லாத கணிதத்தைக் கற்பனை செய்யவே முடியாது. பூஜ்ஜியத்தைக் கண்டறிந்தவர் ஆரியபட்டர். இவர் கணிதத்திலும் வானியலிலும் உலக அறிவியலாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். ஆரியபட்டர் எழுதிய நூல்கள் மூன்று. அவற்றுள் ’ஆரியபட்டீயம்’ மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. இதில் எண்களை பிராமி எழுத்தில் ஆரியபட்டர் எழுதியுள்ளார்.

ஆரியபட்டரின் பெருமைகளை வெளிநாட்டினர் உணர்ந்து வியக்கின்றனர். அவர் கண்டறிந்த ஒவ்வொன்றும், அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னாளில் இலத்தீனிலும் கிரேக்கத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன; இந்தச் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவின. இவையே நவீனக் கணிதத்துக்கும் வானியலுக்கும் அடிப்படையாயின.

ஆரியபட்டீயத்தின் கணிதபாதமே பின்னாளில் அல்ஜீப்ராவாக (Algebra) வடிவெடுத்தது. கிடிபாதமே நவீனத் திரிகோணவியலுக்கான (Trigonometry) ஆதாரமாகும். காலக்கியபாதமும் கோளபாதமும் தற்கால வானியலுக்கு (Astronomy) ஆணிவேராகும். பூமி தட்டையானது என்று கிரேக்க அறிஞர்கள் சொல்லிவந்தபோது அதன் உண்மையான வடிவத்தையும், சூரியக் குடும்பத்தில் கோள்களின் வரிசையையும் துல்லியமாகத் தனது நூலில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வட்டத்தின் சுற்றளவையும் பரப்பளவையும் கண்டறியப் பயன்படும் ‘பை’ (Pi) என்ற மாறிலியின் (3.1416 = 7/22) மதிப்பை முதன்முதலில் கண்டறிந்தவர் ஆரியபட்டரே. அதற்கான வாய்பாட்டையும் அவர் அளித்திருக்கிறார்.

ஆரியபட்டரைச் சிறப்பிக்கும் விதமாக, 1975இல் இந்திய வானியல் ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்திய முதல் செயற்கைக்கோளுக்கு ‘ஆரியபட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில் 2010 முதல் பீகாரில் ஆரியபட்டா அறிவுப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. நைனிடாலில் உள்ள வானாய்வகம் (ARIES) அவரது பெயருடன் இயங்குகிறது.

வினாக்கள்

கணிதத்திற்கான இந்தியாவின் கொடை சுழி (பூஜ்ஜியம்) ஆகும்.

பூஜ்ஜியத்தைக் கண்டறிந்தவர் ஆரியபட்டர்.

ஆரியபட்டர் கணிதத்திலும் வானியலிலும் முன்னோடியாகத் திகழ்கிறார்.

ஆரியபட்டீயத்தின் கணிதபாதமே பின்னாளில் அல்ஜீப்ராவாக (Algebra) வடிவெடித்தது.

ஆரியபட்டா செயற்கைக்கோள் 1975ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

தகவல் துளி

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜராஜனுடைய கல்வெட்டு, நீர் மேலாண்மைக்குத் தமிழர்கள் அளித்த முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளத் துணையாக உள்ளது. ஆரியூர் ஏரியை யார் பராமரித்துச் சுத்தம் செய்து அதை நீர் வற்றாது பார்த்துக்கொள்கிறாரோ அவரது காலடி மண்ணைத் தன் தலைமேல் தாங்குவேன் என்கிறார் ராஜராஜ சோழன். ஆசியக் கண்டத்தின் பெரும்பகுதியைத் தன் வீரத்தால் கட்டி ஆண்ட ஒப்பற்ற மாமன்னர் இவர். ஆயிரம் ஆண்டுகளாக இந்தச் செய்தியை ஆரியூர் ஏரியில் நிற்கும் குமிழித்தூம்புக் கல்வெட்டு சொல்லிக் கொண்டிருக்கிறது. ’குமிழித்தூம்பு மதகு’ என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரைப் பாசனத்திற்குத் திறக்க அமைத்த அறிவியல்பூர்வமான அமைப்பு ஆகும்.