சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.2 படிப்போம்

மணிமேகலை

இயற்கையில் உருவான வளங்களை அதன் ஆற்றலை வீணடிக்காமல் மனிதப் பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல வடிவமைக்கும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். ஏரி, குளங்களில் மழைநீரைச் சேகரித்தும் ஆற்றுநீரை அணைகட்டித் தேக்கியும் நிலத்தடிநீரைக் கிணறு வெட்டி இயந்திரம் மூலம் இறைத்தும் பயன்படுத்தினர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இது தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மன்னவன் தானும் மலர்க்கணை மைந்தனும்
இன்இள வேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திரக் கிணறும் இடுங்கல் குன்றமும்
வந்துவீழ் அருவியும் மலர்ப்பூம் பந்தரும்
பரப்புநீர்ப் பொய்கையும் கரப்புநீர்க் கேணியும்
ஒளித்துறை இடங்களும் பளிக்குஅறைப் பள்ளியும்
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி...

(சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை 102 – 106)

பாடலின் பொருள்

அரசனும் மலராகிய அம்புகளை உடைய மன்மதனும் இன்பம் பயக்கும் இளவேனில் காலத்தில் இளந்தென்றல் வீசும் அழகிய சோலையில் விளையாடினர். அச்சோலையானது நீரை இறைப்பதற்கான இயந்திரம் அமைந்த கிணறு, கற்களால் அமைந்த சிறுகுன்று, வந்து வீழும் அருவி, பூத்துக் குலுங்கும் அழகிய பந்தல் ஆகியவற்றை உடையது. மேலும், நீர் நிரம்பிய குளத்தையும், மறைந்திருக்கும் நீரை உடைய கிணற்றையும் ஒளிந்து விளையாடுவதற்குரிய மறைவான இடங்களையும் பளிங்குக் கற்களால் ஆன அறையுள்ள இடத்தையும் கொண்டது. இவ்வாறு மணிமேகலை கூறுகிறது.

நூலைப் பற்றி

தமிழில் தோன்றிய பௌத்தக் காப்பியங்களுள் முதன்மையானது மணிமேகலை. இது முப்பது காதைகளைக் கொண்டது. மேற்கண்ட பாடல் அடிகள் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதையில் இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன

பொருள் அறிவோம்

1. கணை - அம்பு
2. குன்றம் - மலை
3. பொய்கை - இயற்கையாக அமைந்த நீர்நிலை / குளம்
4. கேணி - கிணறு
5. பளிக்கறை - பளிங்கால் ஆன அறை