சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.3 படிப்போம்

இயற்கை மொழி ஆய்வு

மனித மூளையின் வியக்கத்தக்க படைப்புகள்தான் மனிதரின் இயற்கை மொழிகள். இவற்றை வளர்த்தெடுக்க மனிதச் சமுதாயம் தொடர்ந்து முயன்றுள்ளது. அதன் ஒரு பயனே இயற்கை மொழிகளுக்கான வரிவடிவங்கள். இவை, காலம் கடந்தும் இடம் கடந்தும் தனது கருத்துகளை நிலைபெறச் செய்ய மனிதன் உருவாக்கிய மொழித் தொழில்நுட்பமாகும். இவை பானைகளிலும் பாறைகளிலும் எழுத்துகளாகத் தொடங்கித் தட்டச்சு, அச்சு, கணினி எழுத்துருக்கள் வரை வளர்ச்சி அடைந்துள்ளன.

மின்தமிழ்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கே வசதி கிடையாது. மெல்லமெல்லத் தமிழை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து, அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது. பின்னர், ஆதமி போன்ற மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. தமிழ் எழுத்துருக்களும் தமிழ் விசைப்பலகைகளும் உருவாக்கப்பட்டன. இதன் பயனாக, நேரடியாகவே தமிழைக் கணினியில் உள்ளீடு செய்யும் வசதி ஏற்பட்டது.

தமிழில் இணையதளங்கள், வலைப்பூக்கள் தோன்ற ஆரம்பித்தன. அச்சில் இடம்பெற்ற அனைத்தும் கணினியிலும் இடம்பெற்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருங்குறிக் குறியேற்றம் Unicode Encoding (யூனிகோட் என்கோடிங்) பன்னாட்டுக் கணினி நிறுவனங்களின் வணிக முயற்சிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழுக்குத் தனியே ஒருங்குறிக் குறியேற்ற எண்கள் வழங்கப்பட்டன. இதன் பயனாக, தற்போது மின்னணுச் சாதனங்களில் தமிழை உள்ளீடு செய்ய முடிகிறது.

அடுத்த கட்ட வளர்ச்சி

கல்வெட்டு, ஓலைச்சுவடி, அச்சு, கணினி ஆகியவற்றால் தங்களிடம் பதியப்பட்டவற்றைப் புரிந்துகொள்ள முடியாது; சேமித்துவைக்க மட்டுமே முடியும். இதைத் தன்முனைப்பில்லாத, செயலூக்கமில்லாத மொழித் தொழில்நுட்பம் எனலாம். மொழியைப் புரிந்துகொண்டு கணினி செயல்பட்டால் அதுவே தன்முனைப்புள்ள, செயலூக்கமுள்ள மொழித் தொழில்நுட்பமாகும். இது இயந்திர மனிதர் போன்றது.

மொழித் தொழில்நுட்பக் கருவிகள்

MS Word (எம்.எஸ். வோர்டு) போன்ற மென்பொருள்களைக் கொண்டு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் இருந்தால் உடனே அவை கண்டறியப்பட்டு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன. நாம் அவற்றைத் திருத்திக்கொள்ளவும் உதவுகின்றன. தானியங்கிச் சொற்பிழை திருத்தி, இலக்கணப் பிழை திருத்திகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

டிராகன் போன்ற சில மென்பொருள்கள், நாம் ஆங்கிலத்தில் பேசினால் தட்டச்சு செய்துவிடுகின்றன. இவற்றைப் 'பேச்சு எழுத்து மாற்றி' என்று அழைக்கின்றனர். கணினியில் உள்ளதை அப்படியே நமக்கு வாசித்துக்காட்டும் மென்பொருள்களும் உள்ளன. இவற்றை 'எழுத்து பேச்சு மாற்றி' என்று அழைக்கின்றனர். இதையும் தாண்டி, சில பக்கங்களைக் கணினியில் உள்ளீடு செய்தால் அவற்றில் உள்ள கருத்துகளைப் புரிந்துகொண்டு, நமக்குக் கூறும் மென்பொருள்களும் இருக்கின்றன. இதைப் 'பனுவல் சுருக்கக் கருத்துருவாக்கம்' என்று அழைக்கின்றனர். தற்போது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் மென்பொருள்கள் உருவாகியுள்ளன.

கணினி வளர்ச்சியில் தமிழுக்கான இடம்

பல மேலைநாட்டு மொழிகளின் சொற்களஞ்சிய அறிவும் இலக்கண அறிவும் கணினிக்கு நிரல்களாக உருவாக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தமிழ் மொழிக்கும் செயல்படுத்த வேண்டும். தமிழ் இலக்கண நூல்களும் இன்றைய மொழியியல் ஆய்வுகளும் மனித மூளைக்காக உருவாக்கப்பட்டவை. அவற்றை அப்படியே கணினிக்குக் கொடுத்தால் கணினியால் புரிந்துகொள்ள முடியாது. கணினியின் மின்னணுச் சில்லுகளுக்குப் புரியக்கூடிய கணினிநிரல்களாக அவை மாற்றப்பட வேண்டும். தமிழ் அகராதிகள் எல்லாம் கணினிக்குப் புரியக்கூடிய வகையில் மின்னகராதிகளாக மாற்றப்பட வேண்டும். அதற்கான துறையாக, கணினி மொழியியல் மற்றும் மொழித் தொழில்நுட்பத் துறை இன்று வளர்ந்துவருகிறது.

இன்றைய தலையாய பணி

இன்று மின்தமிழ் வளர்ச்சியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான பணிகள் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளன. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கத்தில் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன. அதையொட்டி, தமிழ் விக்கிப்பீடியா, வலைப்பூக்கள், இணையதளங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. இவையெல்லாம், வரவேற்கத்தக்க தமிழ்ப்பணிகள். ஆனால், இவையெல்லாம் கணினித் தமிழ் வளர்ச்சியின் முதல் கட்டமே ஆகும். அடுத்த கட்ட வளர்ச்சியான தன்முனைப்பும் செயலூக்கமும் உள்ள மொழித் தொழில்நுட்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

பொருள் அறிவோம்

1. உள்ளீடு - கணினியில் பதிவுசெய்தல்
2. ஒருங்குறி - பொதுவான குறிமுறை
3. செயலி - பயன்பாட்டு மென்பொருள்
4. அகராதி - சொற்பொருள் தொகுப்பு
5. எழுதிகள் - எழுத்துகளை உள்ளீடு செய்யும் முறை