சிகரம்
(இரண்டாம் பருவம்)
| வழு | = | குற்றம் / பிழை |
| அமைதி | = | ஏற்றுக்கொள்வது |
| வழுவமைதி | = | குற்றமாக இருந்தாலும் ஏதாவது காரணம் கருதி ஏற்றுக்கொள்வது |
திணை முதலாகக் கூறப்பட்டவற்றுள் ஒன்று வேறொன்றாக மயங்கி வந்தாலும், சான்றோரால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயின் அது வழுவமைதி ஆகும்.
ஒருவன் தன் பசுமாட்டைப் பார்த்து ’என் லட்சுமி மூன்று லிட்டர் பால் தருவாள்’ என்று கூறுவது, அஃறிணையை உயர்திணையாய்க் கருதிக் கூறுதலாகும். இவ்வாறு கூறினாலும், உயர்வு கருதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
வழுவமைதி திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இட வழுவமைதி, கால வழுவமைதி, மரபு வழுவமைதி என ஐந்து வகைப்படும்.
அஃறிணையை உயர்திணையாகக் கூறுவதும் உயர்திணையை அஃறிணையாகக் கூறுவதும் திணை வழுவமைதி ஆகும். மகிழ்ச்சி, உயர்வு, மிகுதி, சிறப்பு, சினம், இழிவு முதலிய காரணங்களால் திணை வழுவமைதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நத்தையாரே நத்தையாரே எங்கே போறீங்க? (அஃறிணை, உயர்திணை ஆயிற்று)
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா (உயர்திணை, அஃறிணை ஆயிற்று)
ஆண்பாலைப் பெண்பாலாகவும் பெண்பாலை ஆண்பாலாகவும் கூறுவது பால் வழுவமைதி. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, சினம், இழிவு முதலிய காரணங்களால் பால் வழுவமைதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மகளைப் பார்த்துத் தந்தை, ‘வாடா செல்லமே’ என்றழைப்பது. பெண்பாலை ஆண்பாலாகக் கருதி அழைப்பதால் இது பால் வழுவமைதி ஆகும்.
’தாய்க்குத் தாயாகிய இறைவன்’ (ஆண்பாலுக்குப் பெண்பால்) விகுதி கொண்டு அழைப்பதால் இது பால் வழுவமைதி ஆகும்.
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடத்திற்குரிய சொற்கள் இடம்மாறி அமைந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அஃது இட வழுவமைதி ஆகிறது. சூழல் காரணமாக இட வழுவை ஏற்றுக்கொள்வது, இட வழுவமைதி ஆகும்.
’வீரனின் தாய் அழுவேனா?’
இத்தொடரில், வீரனின் தாய் என்ற படர்க்கைப் பெயர், ’அழுவேனா’? என்னும் தன்மை வினைகொண்டு முடிந்தது எனவே, இது இட வழுவமைதி ஆகும்.
முக்காலத்தினுள் ஒன்று மற்றொன்றாக மயங்கி வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அது கால வழுவமைதி ஆகும். விரைவு, மிகுதி, தெளிவு, இயல்பு ஆகிய காரணங்களால் முக்காலங்களுள் ஒன்று மற்றொன்றாக மயங்கிவரும்
ஒருவர் தன்னை அழைக்கும்போது, தயாராக இல்லையாயினும் உடனே விடையளிக்கும் பொருட்டு, ’இதோ வந்துவிட்டேன்’ என்று கூறுவது கால வழுவமைதி ஆகும். இத்தொடரில், எதிர்கால நிகழ்வை இறந்த காலத்தில் சொல்வதாகும். இத்தொடர், விரைவு காரணமாக எழுந்தது.
காலம் காலமாகப் பின்பற்றப்படும் மரபு மீறப்பட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுமாயின் மரபு வழுவமைதியாக ஆகும்.
’கத்தும் குயிலோசை எந்தன் காதினில் வந்து விழவேண்டும்’
குயில் கூவும் என்பதே மரபு. ஆனால், அழகியல் கருதி ’கத்தும் குயில்’ என்று பாரதியார் பயன்படுத்தி உள்ளார். இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.