சிகரம்
(இரண்டாம் பருவம்)
நோய்களைக் கண்டுபிடிக்கவும் அவற்றைக் குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது கலையே மருத்துவம். நாடோடியாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இலைச்சாற்றையும் பிற இயற்கைப் பொருள்களையுமே நோய்களுக்கான மருந்துகளாகப் பயன்படுத்தினர். இன்றோ சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அலோபதி, ஹோமியோபதி, யுனானி, இயற்கை மருத்துவம் (Naturopathy), மலர் மருத்துவம், அக்குபங்சர் போன்ற பல வகையான மருத்துவ முறைகள் வழக்கத்தில் உள்ளன.
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். ’உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். சித்தர்கள் இதை உருவாக்கித் தந்தனர். இயற்கையில் கிடைக்கக்கூடிய தாவரப்பொருள்கள், தாதுப் பொருள்கள் போன்றவை சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அவரவர் உடலுக்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாத உணவாலும் நோய்கள் உருவாகின்றன என்கிறது சித்த மருத்துவம்.
ஆயுர்வேதம் இந்தியாவில் தோன்றிய மிகப்பழமையான மருத்துவமுறை ஆகும். ‘ஆயுர்' என்றால் வாழ்க்கை. ‘வேதம்' என்றால் அறிவு. மனிதன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், வாழக் கூடாது என்று அறிதலே ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தில் ஒவ்வொரு வேரும் இலையும் மரப்பட்டையும் மருந்தாகப் பயன்படுகிறது. இது பல நாடுகளில் ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது.
நவீன மருத்துவம் என்றழைக்கப்படும் ஆங்கில மருத்துவ முறையே அலோபதி. இது அறிவியலை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறை ஆகும். மனித உடலை ஆராய்ந்து நோய்க்கான உண்மையான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்கும் வழிமுறையைக் கொண்டது இது. மருந்து என்பதற்கு ஆங்கிலத்தில் Medicine என்பர். இதன் பொருள் ‘குணப்படுத்தும் கலை’ என்பதாகும். கிரேக்க மருத்துவ அறிஞரான ஹிப்போகிரடீஸ்தான் நவீன மருத்துவ அறிவியல் முறையை அறிமுகப்படுத்தியவர். அதனால் இவர் ’மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
ஹோமியோபதி மருத்துவம் என்பது ஜெர்மனியில் தோன்றிய மருத்துவ முறையாகும். இம்மருத்துவ முறையில் நோயின் அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்து அளிக்கப்படுவதில்லை. நோயாளியின் உடல், உளவியல் பண்புகள் கேட்டறியப்பட்டு மருந்துகள் தரப்படுகின்றன. எந்தப் பொருளால் ஆரோக்கியமான மனிதனுக்கு நோய் ஏற்பட்டதோ அந்தப் பொருளைத் தூய்மையான நிலையில் கொடுத்தால் அந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பதே ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படை. தாவரங்கள், விலங்குப் பொருள்கள், தாதுப்பொருள்கள் போன்றவற்றிலிருந்து இதற்கான மருந்துகள் உருவாக்கப்படுகின்றன.
‘யுனானி' என்ற சொல்லுக்கு ’கிரேக்கத்தைச் சார்ந்தது’ என்று பொருள். யுனானி மருத்துவம் கிரேக்கத்திலிருந்து உலகம் முழுவதும் பரவியது. மனிதரின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. மனித உடலில் இருக்கும் நான்கு திரவங்களான கோழை (Phlegm), குருதி (Dam), மஞ்சள் பித்தம் (Yellow bile), கரும் பித்தம் (Black bile) ஆகியவற்றுக்கிடையே உள்ள சமநிலையின்மைதான் நோய்க்கான காரணம் என்கிறது யுனானி.
| 1. | கோட்பாடு | - | கொள்கை | ||
| 2. | வேதம் | - | அறிவு | ||
| 3. | கோழை | - | சளி | ||
| 4. | குருதி | - | இரத்தம் | ||
| 5. | பித்தம் | - | ஈரலினின்று தோன்றும் நீர்வகை |