சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.2 படிப்போம்

நான்மணிக்கடிகை

மனிதகுலத்தின் மேம்பட்ட நிலையே மனிதநேயப் பண்பாகும். மனிதநேயம் என்பது சொல்லப்படுவதன்று; செய்யப்படுவது. தாம் செய்வது மட்டுமல்லாமல் பிறரையும் செய்யத் தூண்டுவது. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வது. மற்றவர் துன்புறுதலைக் கண்டு இரக்கம் கொண்டால் அறம் வெல்லும் என்று சொல்லும் விளம்பி நாகனாரின் பாடலைக் காண்போம்.

வைததனால் ஆகும் வசையே, வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை – செய்த
பொருளினால் ஆகுமாம் போகம், நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.

- விளம்பி நாகனார்

பாடலின் பொருள்

தீயசொல் பேசினால் பகை உண்டாகும். வணங்கினால் (மதித்து நடந்தால்) உறவு அதிகமாகப் பெருகும். பொருளைக் கொடுத்தால் இன்பம் பெருகும். பிற உயிர்கள் மீது இரக்கம் காட்டினால் (மனிதநேயத்துடன் நடந்துகொண்டால்) அறம் உண்டாகும்.

நூலைப் பற்றி

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக்கடிகை. பாடல் ஒவ்வொன்றிலும் நான்கு மணியான கருத்துகள் சொல்லப்படுவதால் இப்பெயர் பெற்றது. இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாவால் ஆனது. இதன் ஆசிரியர் விளம்பி நாகனார்.

பொருள் அறிவோம்

1. வைதல் - தீயசொல் பேசுதல்
2. வசை - பகை
3. கிளை - உறவினர்
4. போகம் - இன்பம்
5. அருள் - இரக்கம்