சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.3 படிப்போம்

மனிதநேயர் லேமா ராபர்ட்டா குபோவீ

உலகில் மக்கள் அமைதியாக வாழ, உன்னதமான மனிதர்கள் சிலரின் தியாகமும் உழைப்பும் தேவையாகின்றன. தம் வாழ்வில் பெற்ற வலிநிறைந்த அனுபவங்களால் போராளிகளாக மாறி, மக்கள் நலனுக்காக உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கும் மனிதர் பலர். மனிதர்பால் நேயம்கொண்டு அவர்களின் நலனுக்காக உழைத்த மனிதநேயம் மிக்க லேமா குபோவீ அவர்களைப் பற்றி இப்பாடம் பேசுகிறது.

லேமா ராபர்ட்டா குபோவீ (Leymah Roberta Gbowee) 1972ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகரமான மன்ரோவியாவில் பிறந்தவர். தன்னுடைய 17ஆவது வயதில் உயர்நிலைப்பள்ளியை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து, உயர்கல்வியைத் தொடர விரும்பினார். 1989இல் தொடங்கிய லைபீரிய உள்நாட்டுப் போரால் அவருடைய கனவு தகர்ந்தது. அவரும் அவருடைய குடும்பமும் மன்ரோவியாவை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. பின்னர், கானாவில் உள்ள அகதிகள் முகாமுக்குச் சென்றனர். சிறிது காலத்தில் மீண்டும் லைபீரியாவுக்குத் திரும்பினார் லேமா. அங்கு, அமைதிக்கான பெண்கள் கூட்டமைப்பில் [Women in Peace building Network (WIPNET)] பணிபுரியத் தொடங்கினார். விரைவில் அந்நிறுவனத்தின் தலைவரானார். போரால் தான் கண்ட வலியும் வேதனையும் நிறைந்த அனுபவத்தை மனத்தில் வைத்துப் பணியாற்றினார். பின்னாளில் லைபீரியாவின் அமைதிக்கான மாபெரும் அமைப்பாக அந்நிறுவனம் (WIPNET) அறியப்பட்டது.

லைபீரியாவின் உள்நாட்டுப் போருக்கு எதிராகப் பல்வேறு இனம் மற்றும் மதப் பின்னணியில் உள்ள பெண்களை அணிதிரட்டினார். அவர்களைக் கொண்டு போருக்கு எதிராக உண்ணாவிரதம், பிரார்த்தனை, அரசாங்கக் கட்டடங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் என அறவழியில் தன் போராட்டங்களை முன்னெடுத்தார். வெண்ணிற ஆடை அணிந்து, அதிக எண்ணிக்கையில் பெண்கள் ஒன்றுகூடி இப்போராட்டங்களை நடத்தினர்.

குபோவீக்கு லைபீரியாவின் குடியரசுத் தலைவர் சார்லஸ் டெய்லரைச் சந்தித்துப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது, அவரிடம், அமைதி வேண்டி மிக அழுத்தமான கருத்துகளை முன்வைத்தார். இதன் விளைவாக 2003ஆம் ஆண்டு சார்லஸ் டெய்லரும் லைபீரியாவின் எதிர்ப்பிரிவினரும் கானாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தை உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குபோவீயும் லைபீரியத் தலைவர்களைப் பின்பற்றிக் கானாவுக்குச் சென்றார். அவர் நூற்றுக்கணக்கான பெண்களோடு சேர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்தைச் சுற்றிவளைத்திருந்தார். உடன்பாடு ஏற்படும்வரை டெய்லரையும் மற்ற தலைவர்களையும் அப்பெண்கள் வெளியேற விடவில்லை.

”போரால் களைத்துவிட்டோம், ஓடுவதில் களைத்துவிட்டோம், உணவு கேட்டுக் களைத்துவிட்டோம்... எதிர்காலக் குழந்தைகளாவது போர்களற்ற உலகில் வாழ வேண்டுமானால் பெண்களே ஒன்றுசேர்வோம், போராடுவோம்” என்னும் முழக்கத்தோடு களமிறங்கிய குபோவீ அம்முயற்சியில் வெற்றிபெற்றார். மேலும், பெண்கள் மாபெரும் சக்தி என்பதை அவர் உலகிற்கே உணர்த்தினார்.

போர்களுக்குப் பின்னான வெற்றிகளைக் கொண்டாடுவதில் குபோவீக்கு உடன்பாடு இல்லை. போர்கள் மனிதகுலத்தின் மீது விதிக்கப்பட்ட சாபங்கள் என்றார். போருக்குப் பின்னான அமைதி நேர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிப்பதில்லை. அவை காயங்களையும் வலிகளையுமே தருகின்றன. போர்கள் எங்கு நடைபெற்றாலும் அதைத் தவிர்க்க உலக நாடுகள் கூட்டாக முயல வேண்டும் என்றார்.

இவர்தம் மனிதநேயச் செயல்பாடுகளைப் பாராட்டி 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசை மனிதநேயச் செயல்பாடுகளில் சிறப்பாகப் பணியாற்றிய எல்லன் ஜான்சன், தவகேல் கர்மனுன், சர்லீஃப் ஆகியோருடன் இணைந்து பெற்றுக்கொண்டார்.

மனிதநேயம் தழைக்க உலகெங்கும் தனிநபராகவும் குழுவாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குபோவீ தனியொருவராக எடுத்த முயற்சிபோல உலகம் முழுதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் உலகில் அமைதி மேம்படும், மனிதநேயம் பேணப்படும்.

பொருள் அறிவோம்

1. உன்னதம் - சிறப்பு
2. முகாம் - தங்கும் இடம்
3. திரட்டுதல் - ஒன்று சேர்த்தல்
4. உடன்பாடு - ஒப்பந்தம்
5. பேணப்படும் - போற்றப்படும்