சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.3 படிப்போம்

வள்ளுவர் காட்டும் மனிதநேயம்

மனிதர்கள் தங்களுடைய சகமனிதர்களிடம் காட்டும் அன்பின் வெளிப்பாடே மனிதநேயமாகும். தம் சுற்றத்தார், நண்பர்களோடு மட்டுமல்லாது எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்டுவதை மனிதநேயம் வலியுறுத்துகிறது. அவ்வாறு மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இன்றும் நிலைபெற்று இயங்கிக்கொண்டிருக்கிறது. எல்லா உயிர்களிடத்தும் அன்புகொண்ட வள்ளுவர் தன் படைப்பில் மனிதநேயக் கருத்துகளை ஆழ விதைத்துள்ளார். அவற்றுள் சிலவற்றை இப்பாடம் கோடிட்டுக்காட்ட விழைகிறது.

அன்பின் வழி

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (80)

என்ற குறளில், அன்பின் வழி நடப்பதன் சிறப்பை எடுத்துரைக்கிறார். அன்பின் அடிப்படையில் இயங்குவதுதான் உயிருள்ள உடலாகும்; அன்பு இல்லை என்றால் இந்த உடல் வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றதாகும் என்கிறார்.

பகுத்துண்டு வாழ்தல்

பகுத்துண்டு வாழ்தல் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (322)

என்ற குறளில், தன்னிடம் உள்ளதைப் பிற உயிர்களுடனும் பகிர்ந்துண்ண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல் கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. இது அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். பகைவரிடத்தும் பண்புடன் நடத்தல்

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை (579)

என்ற குறளில், உற்றார் உறவினர் நண்பர்களிடத்தில் மட்டுமல்லாமல், பகைவரிடத்திலும் பண்புடன் நடக்க வேண்டும் என்கிறார். தன்னை அழிக்க நினைத்திடும் இயல்பு கொண்டவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும் என்கிறது இந்தக் குறள்.

தன்நோய் போல் காத்தல்

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை (315)

என்ற குறளில், பிறருடைய துன்பத்தை எப்படிப் பார்க்க வேண்டுமெனச் சொல்கிறார். பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம்போல் கருதிக் காப்பாற்ற முனைய வேண்டும். அப்படிச் செய்யாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை என்கிறார்.

ஒருமைப்பாடு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (972)

என்ற குறளில், மனிதநேயம் குறித்த உலகளாவிய பார்வையாக உள்ளது. பிறப்பால் அனைவரும் சமம் என்றும் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே அவர்களிடம் வேறுபாடு காண முடியும் என்றும் சொல்கிறார்.

இன்சொல் பேசுதல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (91)

என்ற குறளில், ஒருவர் தன்னைச் சுற்றி வாழும் நபர்களுடன் பேசும் சொல் எப்போது இனிமையான சொல்லாக இருக்கும் என்பதை எடுத்துச் சொல்கிறார். செம்மையான அறங்களை அறிந்த அறவோர்களின் வாய்ச்சொற்கள் இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.

அருளுடைமை

அல்லல் அருள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி (245)

என்ற குறளில், அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது என்றும், இதற்குக் காற்று உலவும் வளம் மிக்க இந்தப் பேருலகமேசான்று என்றும் கூறுகிறார்.

வள்ளுவர் தனிமனித மேம்பாட்டுக்கும் சமூக மேம்பாட்டுக்குமான பல உயர்ந்த கருத்துகளைத் திருக்குறளின் வழியே முன்வைக்கிறார். மனிதச்சமூகம் துன்பமின்றி நல்வாழ்வு வாழ அன்பே சிறந்த வழி என்கிறார். மனிதநேயம் தழைத்தால் உலகம் தழைக்கும், நிலைபெற்று வாழும் என்பது வள்ளுவர்தம் ஆழ்ந்த நம்பிக்கை.