சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.6 கேட்டல் கருத்தறிதல்

மன்னிப்பு

பாலை மணல்வெளியில் நண்பர்கள் இருவர் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் இருவருக்குமிடையே வாதம் தொடங்கியது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப்போய் மணலில் அமர்ந்தான். விரல்களால் இப்படி எழுதினான்: “இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!” மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீரக் குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவனின் காலைத் திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. ஆஹா... புதைகுழியில் சிக்கிக்கொண்டான் அவன். நண்பனின் நிலையைக் கண்டதும், அவனைப் பெருமுயற்சி செய்து காப்பாற்றிக் கரையேற்றினான். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். ஒரு கல்லை எடுத்துத் தட்டித் தட்டி எழுத ஆரம்பித்தான். “இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்!” இதைப் பார்த்து, “நான் உன்னை அறைந்தபோது மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா?” என்று கேட்டான். நண்பனின் பதில், “யாராவது நம்மைக் காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால், யாராவது நல்லது செய்தால் அதைக் கல்லில் எழுது. காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!” என்றான்.

வினாக்கள்

நண்பர்கள் இருவரும் பாலை மணல்வெளியில் நடந்து சென்றனர்.

அறை வாங்கிய நண்பன் அந்த நிகழ்வை மணலில் எழுதினான்.

நண்பர்கள் இருவரும் பாலைவனத்தில் ஊற்றில் குளித்தனர்.

புதைகுழியிலிருந்து மீண்ட நண்பன் கல்லில் “இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்” என்று எழுதினான்.

நண்பன், “யாராவது நம்மைக் காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால், யாராவது நல்லது செய்தால் அதைக் கல்லில் எழுது. காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!” என்றான்.

தகவல் துளி

தமிழ்நாட்டின், நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராம மக்கள் பறவைகள் அமைதியாக வாழ்வதற்காகத் தங்கள் கிராமத்தில் எந்த விழாவையும் கொண்டாடாமல் உயிர்நேய மனப்பான்மையோடு இருந்துவருகின்றனர். கூந்தன்குளம் கிராமத்தில் அதிக அளவில் பறவைகள் வந்துசெல்வதால் இந்தக் கிராமத்தைப் பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல வகையான பறவை இனங்கள் கூந்தன்குளம் கிராமத்தில் உள்ள மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துச் செல்கின்றன. தங்களது கொண்டாட்டங்களால் அப்பறவைகளை அச்சுறுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் இக்கிராம மக்கள் தீபாவளி உள்ளிட்ட அனைத்து விழாக்களையும் கொண்டாடுவது இல்லை.