அவர்களும், மயிலாப்பூர் P.S. உயர்தர கலாசாலைத் தலைமைத் தமிழாசிரியர் பிரம்மஸ்ரீ வே. துரைசாமி ஐயரவர்களும், ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்தி உதவ, ஸ்ரீமான் S. கனகசபாபதிப்பிள்ளையவர்கள் வெவ்வேறாகப் பதித்து வெளிப்படுத்தினார்கள். அப்பதிப்பானும் சில திருத்தம் பெற்றன. இம் முப்பதிப்பாளர்களாலும் பதிக்கப்பட்ட உரைகளுள், பிற்பாகமாகிய இப்பேராசிரியருரையை உடன்வைத்து ஒப்பு நோக்கியபோது முற்பதிப்புக்கள் இரண்டன்கண்ணுமுள்ள பாடங்களினும் பிற்பதிப்பிலுள்ள பாடங்கள் சில, திருத்தமுடையனவாகவும், பிற்பதிப்பிலுள்ள பாடங்களினும் முற்பதிப்புக்களிலுள்ள பாடங்கள் சில திருத்தமுடையனவாகவும், சில பாடங்கள் மூன்றினுந் திருத்தமில்லனவாகவுங் காணப்பட்டன. இம் முப்பதிப்புக்களானுந் திருந்தியவற்றைவிட இன்னும் மிகப் பல இவ்வுரையுள் திருந்தவேண்டியனவாகக் காணப்பட்டமையானே, அவற்றை ஏட்டுப்பிரதிகளோடும் ஒப்புநோக்கித் திருத்தலாமென முயன்றும் திருத்தமான பழைய பிரதிகள் அகப்படாமையினாலே பூரணமாகத் திருத்திக்கொள்ளுதல்கூடாதாயிற்று. அதனால், திருத்தமான பழைய ஏட்டுப் பிரதியைப் பெற விரும்பி அவ் விருப்பத்தை, தமிழ்நாட்டின் றவப்பயனாய்த் தோன்றிப் பழைய பல நூல்களைப் பதித்தும் புதிய பல உரைநூல்களை ஆக்கியு முதவிய மஹாமஹோபாத்யாய--தக்ஷிணாத்ய கலாநிதி--டாக்டர், பிரம்மஸ்ரீ உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கு எழுதினேம். அவர்கள் மனமுவந்து, செய்யுளியன் மாத்திர மமைந்த பேராசிரியருரை ஏட்டுப் பிரதி யொன்றும், மற்றை மூன்றியலு மமைந்த கையெழுத்துப் பிரதியொன்றும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தேகவியோக மடைந்தார்களாயினும் அவர்களுக்கு எமது பேரன்பு உரியதாகுக. அவர்களனுப்பிய பிரதிகளோடு அச்சுப் பிரதிகளை ஒப்புநோக்கியபோது, அப்பிரதிகளிற் சில திருத்தங்கள் கிடைத்தன. அவற்றினு மனமமையாது மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புத்தகசாலையிலே பழைய நல்ல பிரதிகள் இருக்குமெனக் கருதி அங்குச் சென்று, வித்துவமணியாய் விளங்கும் ‘செந்தமிழ்’ப் பத்திராதிபர் ஸ்ரீமத் திரு. நாராயணையங்கார் |