அவர்கள் அப்போது அங்கு இல்லாமையினாலே, செந்தமிழ் உதவிப் பத்திராசிரியரும், வித்துவானுமாகிய ஸ்ரீமத் T. K.இராமானுஜ ஐயங்காரவர்களிடம் உசாவினேம். அவர்கள் சில பிரதிகள் இருப்பதாகச் சொல்லி மனமகிழ்ச்சியோடும் அவற்றை எடுத்து உதவியதுமன்றி யாமிருந்து அவற்றைப் படித்துப்பார்த்தற்கேற்ற வசதிகளும் செய்தார்கள். அவர்கள் செய்த பெருந்தகைமைச் செயல் எம்மால் என்றும் மறக்கற்பாலதன்று. நிற்க: யாம் பிழையுடையனவென்று குறித்து வைத்திருந்த உரைப்பகுதிகளை அப்பிரதிகளோடு ஒப்புநோக்கியபோது சில திருத்தங்கள் காணப்பட்டன. அத்திருத்தங்களை எழுதிக் கொண்டு மீண்டு ஊர்க்கு வந்தபின், இந்தியாவில் வேறு சிலர் ஏட்டுப் பிரதிகள் வைத்திருக்கிறார்களென வறிந்து அவர்களுக்கு எங் கருத்தை எழுதித் தெரிவித்தேம். அவர்கள் தமிழ்மகளிடம் கொண்ட வெறுப்பாற்போலும் தங்களிடம் ஏட்டுப் பிரதிகள் கிடையாவென மறுத்துவிட்டார்கள். பின், கோப்பாய் அரசினர் ஆசிரிய கல்லூரியில் ஆசிரியராய் இருக்கும் வித்துவான் ஸ்ரீமாந் கா. பொ. இரத்தினம் B. O. L. அவர்கள் ஒரு ஏட்டுப்பிரதி தந்து உதவினார்கள். அவர்களுக்கும் எமது நன்றி உரியதாகுக. அவர்களுதவிய பிரதியினும் சில திருத்தங்கள் கிடைத்தன. ஏட்டுப்பிரதிகள் யாவும் பெரும்பாலும் அச்சுப் பிரதிகளோடு ஒத்திருந்தமையானே பின் ஏட்டுப் பிரதிகள் தேடுவதை யாம் ஒழித்துக், கிடைத்த திருத்தங்களோடும் இப்பதிப்பைப் பதிப்பித்தேம். ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்திய திருத்தங்களை விடப் பல்லாண்டாகப் பண்டித வகுப்பு மாணவர்களுக்கு யாம் படிப்பித்த அனுபவத்தினாலே அறிந்து வைத்திருந்த சில திருத்தங்களையும் கீழ்க்குறிப்பிற் காண்பித்துள்ளேம். அவை பின்னாளில் ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்தஞ் செய்பவர்களுக்கு உபயோகமாகுமென எண்ணுகின்றேம். அவற்றுட் பொருந்துவன கொள்க. ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்திக்கொள்வது மிகவரிதான செயலாகும். யாது காரணத்தாலெனின்: ஒரு பிரதியைப் பார்த்து வேறு பிரதி எழுதுவோர் சிதலும் பாணமுந் தின்ற இடங்களுக்குப் புள்ளியிட்டெழுதாது சேர்த்து |