எழுதிவிட்டமையானும், சிலவிடங்களிற் றங்கருத்திற்கேற்பச் சில சொற்களையும் வாக்கியங்களையும் பெய்து எழுதிவிட்டமையானும், பொருள் விளங்காத இடங்களைப் பிழைபட வுணர்ந்து திருத்திவிட்டமையானும், வரிகளை மாறி எழுதிவிட்டமையானும், உண்மைப் பொருள் இதுவென உணரமுடியாமை யான் என்க. சொற்களும் வாக்கியங்களுஞ் சிதைந்த இடங்களையும் வரிகள் மாறியுள்ள விடங்களையும் அங்கங்கே (சிறப்பாக 300-ம், 302-ம், 307-ம், 313-ம், 369-ம், 416-ம், 448-ம், 460-ம், 461-ம் சூத்திர உரைகளை) நோக்கி யுணர்ந்து கொள்க. சில சூத்திரவுரையுள் முன்வந்த வரிகள் பின்னும் வந்துள்ளன. அவற்றை 300-ம் சூத்திரவுரை முதலிய நோக்கி யுணர்க. இன்னும் யாம் இப்படியிருந்திருக்கலாமென்று காண்பித்த இடத்திற் றிருத்தம் வேறுவிதமாகவு மிருந்திருக்கலாம். எங்ஙனமிருப்பினும் அப்பிழை அவ்விடத்திற் றிருத்தமுற வேண்டும் என்பதே எமது கருத்தாம். மேலும், எளிதில் விளங்கற்கரிய விடங்களையும், செய்யுளியலில் வருந் தொடைக் கணக்குகளையும் எளிதிலறிய விரித்து விளக்கியும், தொடைக்கணக்குப் பாக்களில் வரும் பிழைகளைத் திருத்தியுங் காண்பித்துள்ளேம். அவற்றை 341-ம், 369-ம் சூத்திர உரை முதலியவற்றை நோக்கி உணர்ந்துகொள்க. மேலும் யாம் திருத்தமென்று கண்ட விடங்களிலுஞ் சில சொற்களும் வாக்கியங்களும் எம் நோக்கிற்குத் தப்பிப் பிழையாகவு மிருக்கலாம். அவற்றையும் ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்திக்கொள்வார்களாக. பேராசிரியர் எழுதிய உரைதானென்று கூற முடியாமல் அத்துணைப் பிறழ்ச்சியடைந்திருக்கும் இவ்வுரையை யாம் பூரணமாகத் திருத்திவிட்டேமென்று கூறுவது எமக்கே பெரும் அவமானமாகும். நிற்க: யாமிப்போது அச்சிட்ட இப்பதிப்புப் பூரணமாகத் திருந்தியதென்பது எமது கருத்தன்றாதலால், பழைய ஏட்டுப் பிரதிகள் வைத்திருப்பவர்கள் தமிழ்மகளின் நலம் கருதி அவற்றை அனுப்பி வைப்பின் இரண்டாம் பதிப்பில் இன்னுந் திருத்தஞ் செய்யலாமென்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொள்ளுகின்றேம். மேலும் யாம் திருத்திய திருத்தங்களிலும், எழுதிய உரைவிளக்கக் குறிப்புக்களிலும் எமது முதுமை, மறதி முத |