நல்வேட்டனார்

53. குறிஞ்சி
யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது
அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ?
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?-
'வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,
5
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
10
முனியாது ஆடப் பெறின், இவள்
பனியும் தீர்குவள், செல்க!' என்றோளே!

வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.-நல்வேட்டனார்

292. குறிஞ்சி
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின், கானம் என்னாய்;
5
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்,
வாழேன்-ஐய!-மை கூர் பனியே!

இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்