மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

250. மருதம்
நகுகம் வாராய்-பாண!-பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
5
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
10
'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே!

புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்

369. நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
5
இன்றும் வருவது ஆயின், நன்றும்
அறியேன் வாழி-தோழி!-அறியேன்,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
10
சிறை அடு கடும் புனல் அன்ன, என்
நிறை அடு காமம் நீந்துமாறே.

பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்