முடத்திருமாறன், முடத்திருமாறனார்

105. பாலை
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்,
கடு நடை யானை கன்றொடு வருந்த,
5
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண்
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
10
அம் சில் ஓதி அரும் படர் உறவே.

இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்

228. குறிஞ்சி
என் எனப்படுமோ-தோழி!-மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
5
அருளான்கொல்லோ தானே-கானவன்
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?

தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது.-முடத்திருமாறனார்