முதுகூற்றனார்

28. பாலை
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன்மாதோ-
5
மணி என இழிதரும் அருவி, பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி,
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே!

பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.-முதுகூற்றனார்

58. நெய்தல்
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர்
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ-
5
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
10
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே!

பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது.- முதுகூற்றனார்