பெரியன்

131. நெய்தல்
ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப!
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
5
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய,
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ், பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?

மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது.-உலோச்சனார்

180. மருதம்
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின், செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே;
5
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல,
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே.

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.