ஆம்பல்

280. மருதம்
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
5
புலவாய்' என்றி-தோழி!-புலவேன்-
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
10
கைதூவு இன்மையின் எய்தாமாறே.

வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.- பரணர்

290. மருதம்
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
5
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே!
நீயே பெரு நலத்தையே; அவனே,
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே.

பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்

300. மருதம்
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்-
5
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம்
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது,
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண்
10
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே.

வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு - பரணர்

345. நெய்தல்
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,
5
வெளிய விரியும் துறைவ! என்றும்,
அளிய பெரிய கேண்மை நும் போல்,
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
10
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே!

தெளிவிடை விலங்கியது.-நம்பி குட்டுவனார்