கொக்கு

100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
5
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
10
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.

பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்

258. நெய்தல்
பல் பூங் கானல் பகற்குறி மரீஇ
செல்வல்-கொண்க!-செறித்தனள் யாயே-
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,
5
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
10
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள்
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே.

தோழி செறிப்பு அறிவுறீஇயது.-நக்கீரர்

280. மருதம்
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
5
புலவாய்' என்றி-தோழி!-புலவேன்-
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
10
கைதூவு இன்மையின் எய்தாமாறே.

வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.- பரணர்

326. குறிஞ்சி
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,
துய்த் தலை மந்தி தும்மும் நாட!
5
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
10
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே.

தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்