துண்டென்பதும் அஃது இடப இலைச்சினை யென்பதும் அப்பூணில் பவளத்தாற் செய்த இடபவுருவும் பொன்னாற்செய்த மழு வாள்களினுருவு முளவென்பதும் தெரிகின்றன. இச்செய்தி வேறெங்கும் கண்டதில்லை. இதனானே இவரைச் சைவ சமயத்துக்கு ஓர் அரும் பொருளளித்தவ ரென்னலாம். 2. உள்ளிவிழவு :
"கொங்கர், மணிஅரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவி னன்ன’’ -அகம். 368 : 16 - 18. | இதனால், இவ்விழாவிலே கொங்கர், தம்மிடையிலே மணிகளைக் கட்டிக்கொண்டு வீதியிலே ஆடுவரென்ற செய்தி அறிவிக்கப்படுகிறது. இவ்விவரம் வேறெங்கும் காணப்படவில்லை. 3. பரசுராமன் வேள்வி செய்த இடம் செல்லூர் என்பது :
"கெடா அத் தீயின் உருகெழு செல்லூர்க் கடாஅ யானைக் குழுஉச்சமந் ததைய மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன் முன்முயன் றரிதினின் முடித்த வேள்விக் கயிறரை யாத்த காண்டகு வனப்பின் அருங்கடி நெடுந்தூண் போல யாவரும் காண லாகா மாணெழி லாகம்’’ - அகம் 220 : 3 - 9. | இப்பகுதியால் பரசுராமன் மன்னவரை அழித்து மிகமுயன்று அரிதாக வேள்வி செய்தானென்றும் அவ்வேள்வி செய்த இடம் செல்லூரென்றும் அவ்வேள்வியின் யூபத்தம்பத்தின் இடைப்பகுதி யாருக்குந் தெரியாதவாறு தருப்பைக்கயிற்றால் மறைத்துக் கட்டப்பட்டிருந்ததென்றும் தெரியவருகின்றன. 4. மதுரைவீதிகள் தூயனவாயிருந்தன வென்பது :
"கதிர்விரியா வைகலிற் கைவாரூஉக் கொண்ட மதுரைப் பெருமுற்றம் போலநின் மெய்க்கட் குதிரையோ வீறியது’’ -கலி. 96. | இவ்வடிகளால் மதுரையிற் பெரிய வீதிகளெல்லாம் விடியற்காலத்தே அலகால் சீத்துக் குப்பை வாரித் தூயனவாக்கப்பட்டு வந்தனவென்பது அறியப்படுகின்றது. 5. வியாழமும் வெள்ளியும் அரசியனூல் இயற்றின ரென்பது :
"நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவையெடுத் தறவினை யின்புறூஉ மந்தண ரிருவருந் திறம்வேறு செய்தியி னூனெறி’’ -கலி. 99. |
|