ஆசிரியர்கள் வரலாறு. 1. பாலைபாடிய பெருங்கடுங்கோ. இக்கலித்தொகையில் முதற்பகுதியாகிய பாலைத்திணைக்குரிய 35 கலிப்பாக்களையும் பாடியவர் பெருங்கடுங்கோ அல்லது பெருங்கடுங்கோன்1 என்னும் பெயரால் வழங்கப் பெற்றவர் ; இவரது இயற்பெயர் இன்னதென்று துணியக்கூடவில்லை. கடுங்கோ என்பது கடியென்னுமுரிச்சொல் ஈறுதிரிந்து கோவென்னும் பெயர்ச் சொல்லோடு புணர்ந்துள்ளது; காரணம்பற்றிய பெயரென்னத்தக்கது. ஆனாலும், சேரமான் மாந்தரன் பொறையன் கடுங்கோ, சேரமான் கடுங்கோ வாழியாதன் என்பன முதலிய சில தொடர் மொழிப்பெயர்களிற் கடுங்கோ வென்பது சேரபரம்பரையினர்களுக்கு வந்திருத்தலாலும் இவர் அப்பரம்பரையினரென்று தெரிதலாலும் அவர்களுக்குப் பிற்காலத்தவர் இவரென்று துணிந்து அப்பெயர் இவர்க்கு இடப்பெற்றதெனின் கடுங்கோ வென்பது இவரது இயற்பெயராம். இந்தக் கடுங்கோ வென்பதன் முன் பெருமை யென்னும் பண்புப்பெயர் புணர்ந்து பெருங்கடுங்கோ வென நிற்கின்றது. அப் பண்புப்பெயர் இவர் இளங்கடுங்கோவுக்குத் தமையனாரென்பது பற்றிப் புணர்க்கப்பெற்றதென்று சிலர் ஊகித்தனர். அவ்வாறு இருப்பினும் இருக்கலாம். அவர் மருதத்திணையைச் சிறப்பித்துப் பாடியிருத்தலால் மருதம்பாடிய இளங்கடுங்கோ என வழங்கப் பெறுகின்றனர். அவர் ஒரு சோழவேந்தனால் ஆதரிக்கப்பெற்றுச் சோணாட்டிலிருந்து மருதத்திணையிலே பயின்றவரென்று தோன்றுகிறது. அவர் செய்தி இங்கே இம்மட்டில் நிற்க, பெருங்கடுங்கோ என்பதன்முன் பாலைபாடிய என்னும் அடைமொழி வந்துற்றது இவர் இக்கலிப்பாக்களைப் பாடியது பற்றியே
1 ‘கடுங்கோன் என்னும் பெயர் பாண்டியர் மரபிலுமுண்டு. ‘காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாக’ என வருதல் காண்க.
|