தமிழ் வளர்க்கு முயற்சி.
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவர்களாக விளங்கும் கௌரவம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீ காசிவாசி ஸ்வாமிநாத ஸ்வாமிகளவர்கள், தமிழ்ப் புலமை மிக்கு, தஞ்சை சரபோஜி மஹாராஜாவின் அவைக்களத்தில் ஆஸ்தான பண்டிதராயிருந்தவரும், கோடீச்சுரக்கோவை தஞ்சைப் பெருவுடையாருலா முதலியவற்றை இயற்றியவரும், சென்னை இராசதானிக் கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராயிருந்து புகழ்பெற்றவரும் ஆகிய கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகரவர்கள் மரபில் ஜனித்தவர்கள். தமிழ்மணங்கமழும் அம்மரபில் தோற்றத்தினாலோ, டில்லித் துலுக்க அரசனையும் தம் தெய்வ சக்தி காட்டி வசப்படுத்திய அருட்புலமை வாய்ந்த தமிழ்ப் பெரியாரான ஆதிகுமரகுருபா ஸ்வாமிகள் பீடத்தின் ஏற்றத்தினாலோ அவர்கள் தமிழபிமான மிகுந்து அதனைப் பல வழியாலும் வளர்க்க முயன்று வருகிறார்கள். அம் முயற்சி தமிழுலகத்திற்கு அரும் பயனையும் ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிகளவர்களுக்குப் பெரும் புகழையும் தந்து நிறுத்தத்தக்கவை. சென்னைச் சருவ கலா சங்கத்தாரால் நடத்தப்பெறும் வித்துவான் பரீக்ஷையில், வருடந்தோறும் தமிழில் முதல் வகுப்பில் முதல்வராகத் தேர்ச்சிபெற்ற மாணாக்கருக்கு அவ் வருடத்து 1000 ரூபாய் நன்கொடையளிப்பதாக ஏற்பாடு செய்து மூன்றுவருடமாக அளித்து வருதல் யாவருமறிந்ததே. இஃது என்றும் நிலைபெற்று நடந்து வருவதற்காக 1928ஆம் u ஆகஸ்டு மாதத்தில் அமெரிக்கா கண்டத்து டாரண்டோ என்னும் நகரத்திலுள்ள “தி மானுபாக்ச்சரர்ஸ் லைப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி” (The Manufacturers Life Insurance Company)யில் தங்கள் ஆயுளை ரூபாய் நாற்பதினாயிரத்துக்கு இன்ஷ்யூர் செய்து, 4, 46, 416 என்னும் எண்ணுள்ள பாலிஸியை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இப்போது பலர் தமிழைச் சிரத்தையோடு படிக்கிறார்கள். இவர்களது நுண்ணறிவும் பயனுறுவினை செய்யும் நோக்கமும் அரியன அறிந்துரைக்கும் ஆற்றலும் தமிழபிமானமும் பல வருடங்கட்கு முன்பே எனக்கு மகிழ்வை உண்டாக்கின. அவை நாளுக்கு நாள் வளர்ந்து இப்போது பயனளிக்கத் தொடங்கி யிருக்கின்றன. இன்னும் சில நாளில் நல்ல பயனை மிக வளிக்கு மென்பது நிச்சயம்.
|