- 159 -

     பகைவர்பால் முனிந்து செய்யும் செயலையுடைய அரசன் எனினுமாம்.  இனி, ‘முனிவினை மன்னன்றன்மேல் முறுகினள் ஒழுகும'; என்பது, கவியின் கூற்றாகக் கொள்ளவும் அமையும்.  இப்பொருட்கு அரசன் என்பதை வருவிக்க.     (38)

மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்

111. அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன்
  உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின்
  விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத்
  துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே.

(இ-ள்.) மன்னன்-(தன் மனைவியின் ஒழுக்கத்தாற் சினங்கொண்ட) மன்னன், அரச அவை விடுத்து-ராஜ சபையை விட்டுவிட்டு, அறு சினன் ஒப்ப-உண்மையில் கோபமற்றவன் போல, உரையலன் - யாதொன்றும் பேசா தவனாகி,  அமளிதன்மேல் - படுக்கையின்மீது, உறங்குதல் புரிந்த போழ்தில்-(பொய்த்)துயில் கொண்டபோது,  விரை கமழ் குழலி-மணம் நாறும் கூந்தலையுடைய அரசி,  மேவி- (பள்ளியறையை) அடைந்து, மெய்த்துயில் என்று -அவன் உறங்குமது உண்மை உறக்கம் என்றே கருதி,  காமத்துறை யினள்-காமவழியினளாகி, பெயர்ந்து - திரும்பி, தோழி குறியிடம் - தோழியால் நிருமிக்கப்பட்ட குறியிடத்தை, துன்னினாள் - அடைந்தாள்;(எ-று.)

மன்னன் பொய்யுறக்கம் கொண்டகாலத்தில்  அங்குச் சென்ற அரசி, காலம் நீட்டித்ததனால் மெய்த்துயில் என்றெண்ணி, குறியிடம் சேர்ந்தாள் என்க.

தன்மேல் முறுகினள் ஒழுகும் மனைவியின்பால் தானும் உறுசினம் கொண்டிருந்த காவலன், அச் சினத்தை அடக்கிக்கொண்டிருந்தான் ஆகலின், ‘அறுசினன் ஒப்ப'; என்றார். மன்னன்பக்கலில் படுக்கச்சென்ற அவள்  அரசன் உறங்குதலைக் கண்டு திரும்பிச் சென்றாள்.  ஆகலின், ‘பெயர்ந்து'; என்றார்.  தோழியால் குறிப்பிட்டுத் தனிமையாக அமைந்த இடம் ‘குறியிடம்‘  எனப்பட்டது.                                     (39)