- 168 -

உயர்குலம் முதலியவற்றையுடைய இவளையும் கடை மகனுக்கு அடிமை செய்வித்த காமத்தை விட்டொழிப்பதே சிறப்பென் றெண்ணினானென்க.

‘கருமலிகிருமி‘ யென்றது, ஈண்டு அஷ்டபங்கனின் இழிபிறப்புக் கருதிக் கூறியதாகும்.  கிருமிகள்-அழுக்கு மிக்க பொருள்களில் தோன்றும்.  இனி,  உருவம் அழகு குலம் முதலியவற்றால் திருமகளை யொப்பவளாகிய இவளை என்று நேரே கொண்டு பொருள் கூறுதலும் அமையும். தான், அசை. மாதர், ஈண்டுப் பெண் என்னும் பொருளில் நின்றது.                         (49)

மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்

122.  மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள்
  புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்
  பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும்
  கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான்.

(இ-ள்.) மண் இயல் மடந்தையும்-பூமிதேவியும், மருவினர்க்கு-(தன்னைச், சேர்ந்தவர்களுக்கே, உரியள் அல்லள்-உரிமை யுடையவள் அல்லள்;  புண்ணியம் உடைய நீரார் - நல்வினைப்பயனுடைய நீர்மையாளர், புணர்ந்திட - (தன்னைச்) சேர, புணர்ந்து-(தானும்) சேர்ந்திருந்து,  நீங்கும்-(பின்னர்ப், பிரிந்துவிடுவாள். பெண் இயலது-பெண்களின் தன்மை, அது அன்றோ - அதுவேயன்றோ!  இவர்கள் பெயர்க - இவ்விருவரும் நீங்குவார்களாக.  யாமும்-நாமும், கண்ணிய இவர்கள் தம்மை - (இதுவரையும் உரியர் என்று) கருதிய இவ ரிருவரையும், கடப்பதே-தீர்த்துறப்பதே, கருமம் என்றான்-இனிச் செய்யவேண்டிய காரியமாகு மென்றுஎண்ணினான். (எ-று.)

மண்மடந்தையும் மருவினர்க்கு உரியள் ஆதலில்லை;பெண்களின் இயல்பு அதுவே.  ஆகலின், இவரிருவரையும்ஒருசேரத் துறப்பதே கருமமென் றெண்ணினானென்க.