- 184 -

(இ-ள்.)  உயிர்ப்பொருள் வடிவு - (மாவு முதலியபொருள்களால்)  பிராணிகளைப் போலப் புனைந்த வடிவங்களை, கோறல் - கொல்லுவதும்,  உயிர்க்  கொலை போலும் என்னும் - (எண்ணத்தால் நிகழும் அச் செயல்) பிராணிகளைக் கொன்றது ஆகும் என்று   நினைக்கின்ற,பயிர்ப்பு உளம் உடையன் ஏனும் - அருவருப்புடைய உள்ளம் உடையவனாயினும்,  அறத்தின் திண்மை  - திருவறத்தின் திட்பத்தை, அறிவதற்கு அமைவு இலாதான் - முற்றும் அறிவதற்கு வாய்ப்பு (பொருத்தம்) இல்லாதவனும்,பற்று அறத் துணிவு இல் மன்னன் - (தாயின்பால்  கொண்டுள்ள அன்பால் அச்செயலை)  முற்றத் துறத்தற்கு  மனத்திட்ப மில்லாத அரசனுமாகிய யசோதரன்,  அவள் செயிர்த்து உரைத்த செய்கை - சந்திரமதி கோபித்து(ப் பின்னர்)க் கூறியஉருவக் கொலை, செய்வதற்கு - --, இசைந்தது என்றான் -தக்கது என்று எண்ணினான்; (ஆகலின்),  அயிர்ப்பது  என் - (அவனிடத்து நாம்) சந்தேகிக்க வேண்டியது யாது உளது?(என்று அபயருசி மாரிதத்தனுக்குக் கூறினான்.  (எ-று.)

பிராணிகளின் வடிவப்பொருளைக் கோறலும் கொலையேயென்றறிந்திருந்தும் யசோதரன் அதற்கிணங்கினா னென்க

உருச் செய்த அதனைக் கொன்றாலும் எண்ணத்தால் அவ்வுருவுடைய பிராணியை வதைத்தது போலாகும் என்பதனை அறிந்தவ னாதலின், அச்செய்கையில்  அருவருப்புடையவனா யிருந்தான் என்பார், ‘உயிர்ப்  பொருள்  வடிவுகோறல் உயிர்க்கொலை போலும் என்னும் பயிர்ப்புள முடையன்‘  என்றார். பயிர்ப்பு - அருவருப்பு.  செயிர்த்தவள்என்று ஒரு சொல்லாகக் கோடலுமாம்.  அறவுரை மொழிந்த இவன்மனம் எங்ஙனம் மாறிற்றென ஐயங்கொண்ட மாரி தத்தன் முகக்குறிப்பை நோக்கி, ‘அயிர்ப்ப தென்‘ என்றான் என்க.  இது,  ஆசிரியர் கூற்றுமாம்.  இனி, ‘அறத்தின் திண்மை அறிவதற்கு அமைவிலாதவனிடத்து அயிர்ப்ப தென்‘ என்று இயைத்துக் கூறினுமாம்.        (66)