- 276 -

க்ருஷ்ண, நீல, கபோத, பீத, பத்ம, சுக்லலேஷ்யை என்பன. (லேஷ்யை - எண்ணம்), அவற்றுள், க்ருஷ்ணலேஷ்யை, மிக்க கோபம் முதலியன உடையது. இதனை, ‘அதிரௌத்ரீ ஸதாக்ரோதீ - மத்ஸரீ  தர்மவர்ஜ்ஜித:, நிர்த்தயோ வைரஸம்யுக்த: க்ருஷ்ண லேஷ்யாதிகோ நர:‘ என்ற சுலோகத் தால் அறியலாகும்.  மறம் -  கொலை.  ஐயோ! இரக்கக் குறிப்புச் சொல்.(40)

இதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்
 
260.  காளைதகு கல்யாண1 மித்திர னெனும்பேர்
  ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய
  கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன்
  வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான்.

(இ-ள்.) அரசன் - யசோமதிக்கு,  உயிர் அனைய கேள் - உயிரொத்த நண்பனாகிய, காளை தகு - இளைய தகுதியுடைய, கல்யாண  மித்திரன் எனும்  பேர் - கல்யாண மித்ரன் என்னும் பெயருள்ள,  ஆளி அடு திறல் - சிங்கத்தை வெல்லும் ஆற்றலுடைய, வணிகன் ஒருவன்  - ராஜரேஷ்டி(வியாபாரி) ஒருவன்,  வந்து இடை புகுந்து - அரசன் எதிரில் வந்து முனிவருக்கு இடையில் புகுந்து தடுத்து , கெட்டேன் - ஐயோ கெட்டேன் (என்று வாய் விட்டுக் கூறி), அரச - வேந்தே, மாதவன் முன் - தபோதனர்மேல், வாள் உருவுகின்றது என் - (உறையி னின்றும்) வாளுருவி ஓங்குவது யாது காரணம்? என்றான் -என்று வினவினான்.  (எ-று.)

இளமை, குணம், வன்மை, நட்பு ஆகிய நான்கும் ஒருங்கெய்தப் பெற்ற வணிகனாகிய கல்யாண மித்ரன் அரசனைத் தடுத்தானென்க.

கெட்டேன், உலக வழக்கு : இரக்கக் குறிப்புச்சொல். வணிகன் - அரசரால் சிரேஷ்டிபதம் பெற்றவன்:  அரசருடன் உறைதல் மரபு. இதை ஸ்ரீபுராணத்துள் காணலாம்.  (சக)

 

1 கலியாண