- 286 -

வேறு ஆராய்வது என்? ஞமலி இவை நணுகல - (நீஏவிய)இந்நாய்கள்(இவரை)அணுகா தொழிந்தன, காணாய் - (ஆதலின் இவர் பெருமையை) இவ்வொன்றிலேயே காண்பாயாக.

முனிவரரைக் கண்டதனால் இன்று கொலைத்தொழில் முதலிய குற்றங்கள் நின்னைச் சாராதொழிந்தனவென்றானென்க.

யோகம் - தபோயோகம்,  இதை, மேரு. 144, 145 ல்காண்க, தவசிகள் முன்னர், இயல்பாகப் பகையுள்ள உயிர்களும் தீங்கு செய்யாமையை, மேரு.143ல் காண்க, சொல்கள் இரண்டும் அசைகள்.  வேட்டையாடி விலங்குகளைக் கொல்லவந்த உனக்கும் கொலைத்தொழில் தவிர்ந்தது என்பதை வலியுறுத்துவான், ‘கொலை வேலோய்‘ என்று விளித்தான்.(53)

273.  என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச்
  சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா
  இன்றெனது பிழைதணிய வென்றலை யரிந்து
  நின்றமுனி சரணிலிட1 லென்றுநினை கின்றான்.

(இ-ள்.) என்று அவன் உளம்கொள இயம்பினன் -என்றிவ்வாறு அரசன் மனங்கொள்ளுமாறு (வணிகள்) கூறினான்:  இயம்ப - அங்ஙனம் கூற (கேட்டிருந்த அரசன்), ‘சென்று - (இம்முனிவரர் அருகில்) போய், திருவடிமலர் (இவருடைய பாத தாமரைகளை, சென்னிமிசை அணியா-என்தலையில் அணிந்து வணங்கி, இன்று - இன்று நிகழ்ந்த, எனது பிழை தணிய - என் பிழை நீங்குமாறு, என் தலை அரிந்து-என்  தலையைக் கொய்து, நின்ற முனி சரணில் இடல்-யோகத்தில் நின்ற முனிவன்பாதங்களில்  இடுவேனாக,  என்று நினைகின்றான் - என்று மன்னன் நினைக்கின்றனன்.  (எ-று.)

அரசன், தன் தலையை அரிந்து முனிவர் பாதத்திலிடக்கருதினானென்க.

 

1 சரணினிட என்றும் பாடம்.