277. |
ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை |
|
வாங்கியவ னுணரும்வகை வைத்தருள் செய்கின்றான் |
|
ஈங்குமு னியற்றிய தவத்தினி லசோகன் |
|
ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான். |
(இ-ள்.) ஆங்கு
- அப்பொழுது, முனி - சுதத்தர சாரியர், அவதியின் வாங்கி அறிந்த பொருள் அதனை -
(பிறருடைய முற்பவநிகழ்ச்சிகளை அறியுந்தன்மையுள்ள) அவதிஜ்ஞானத்தினால் கிரகித்து
உணர்ந்த உண்மைப் பொருள்களை, அவன் உணரும் வகை வைத்த - அவ்யசோமதியரசன் (மனத்தில்
கிரகி்த்து) உணரும் வகையில் முறைப்படுத்தி, அருள் செய்கின்றான் - கருணையுடன் மொழிவாராயினார்:
(அரசே), அசோகன் - நின் பாட்டானாகிய அசோகன், ஈங்கு - இவ்வுலகத்தில், முன் இயற்றிய
- முன்னர் செய்த,தவத்தினில் - தவப்பேற்றினால், புகழ் ஓங்கும் அமருலகம் ஒன்றினுள்
- புகழ்மிக்க தேவ கல்பங்களுள் ஒன்றில், உவந்தான் - இன்புறுவானாயினான். (எ-று.)
ஓதியினுணர்ந்த
முனிவன், அசோகன் தேவருலகில் எய்தியதனைக் கூறினானென்க.
இதுமுதல் 293 ஆவது கவி வரை ஒரு தொடர். அசோகன் வரலாறு
2 கவியாலும், அமிர்தமதி வரலாறு 11 கவியாலும், யசோதரன் சந்திரமதி வரலாறு 3 கவியாலும்
கூறுகின்றாராதலின், ’அவன் உணரும் வகை வைத்து அருள் செய்கின்றான்‘ என்றார். அவதி
- அவதிஜ்ஞானம்: ஐவகை ஞானத்துள் ஒன்று. அவதிஜ்ஞானம் என்பது ஒஹிணாணம் என்று
பிராக்ருதத்திலும், ஓதி ஞானம் என்று தமிழிலும் வழங்கும். மேகத்தால் மறைந்த சூரியனது
ஒளி மேகத்தின் அளவுக்கேற்றவாறு ஏற்றத்தாழ்வு எய்துவதுபோல, உயிரின் இயல்பாய அறிவான
கேவல ஞானமும் வினைகளின் உதயத்தால் மறைந்து வினைக் கேற்றவாறு (அறியுந்தன்மையில்)
ஏற்றத்தாழ்வு பெற்றுப் பலபெயர் பெறும். அவை விரிவகையால் பலவாயினும் தொகைவகையால்
ஐந்து ஆகும். அவை, மதி ஜ்ஞானம், சுருதஜ்ஞானம், அவதிஜ்ஞானம், மனப்பர்யய ஜ்ஞானம்
|